மண்ணுக்கு மரம் பாரமா.. மரத்துக்கு இலை பாரமா.. இந்தப் பாடலை மறக்கத்தான் முடியுமா?
- இரா. காயத்ரி
பழைய படங்கள் என்றாலே அது தனி தான். அதிலும் அந்தக் காலத்தில் எழுதப்பட்ட பாடல்கள் ஒவ்வொன்றும் அன்றாட வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாகவே அமைந்தன.
குறிப்பாக தத்துவப் பாடல்களை மட்டும் எடுத்துப் பார்த்தால் அத்தனை முத்துக்கள் அதில் கொட்டிக் கிடப்பதை உணர முடியும். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன், மருதகாசி என அந்தக் காலத்துக் கவிஞர்கள் எழுதிய பாடல்கள் அத்தனையுமே முத்துதான். அதிலிருந்து ஒன்றை இப்போது பார்ப்போம்.
மண்ணுக்கு மரம் பாரமா என்று ஒரு பாடல் உண்டு. அந்தப் பாடலை எழுதிய பாடலாசிரியர் கவிஞர் பி.கே. முத்துசாமி ஆவார். இது 1958ல் வெளியான 'தை பிறந்தால் வழி பிறக்கும்' திரைப்படத்தில் இடம்பெற்றது. கவிஞர் கண்ணதாசன், மருதகாசி, சுரதா ஆகியோருடன் இணைந்து இவரும் இப்படத்தில் பாடலை எழுதியுள்ளார்.
மண்ணுக்கு மரம் பாரமா, மரத்துக்கு இலை பாரமா, கொடிக்கு காய் பாரமா, பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா.... என்று இந்தப் பாடல் செல்லும்.
கே.வி. மகாதேவன் இசையமைப்பில் உருவான இந்தப் பாடலை எம்.எஸ். ராஜேஸ்வரி. அழகான குரலில் ராஜேஸ்வரி பாடிய இந்தப் பாடலைக் கேட்கும் ஒவ்வொருவருக்குள்ளும் தாய்மை சுரக்கும்.. பாசம் பிறக்கும்.
மிகச்சிறந்த பாடல் இது.. தாய் பாடும் தாலாட்டுப்பாடலாய் அமைந்திருக்கும். ஒவ்வொரு தாயும் கேட்டு உணர வேண்டிய ஒரு பாடல்.
"மண்ணுக்கு மரம் பாரமா
மரத்துக்கு இலை பாரமா ,
கொடிக்கு காய் பாரமா
பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா "
தன் பிள்ளையை கவனிக்கத் தவறும் ஒவ்வொரு பெண்ணும் கேட்க வேண்டிய பாடல்.
"வாடிய நாளெல்லாம் வருந்தி வருந்தித் தவமிருந்து
வாடிய நாளெல்லாம் வருந்தி வருந்தித் தவமிருந்து
தேடிய நாள் தன்னில் செல்வமாய் வந்தவளே
தேடிய நாள் தன்னில் செல்வமாய் வந்தவளே
மலடி மலடி என்று வையகத்தால் ஏசாமல்
மலடி மலடி என்று வையகத்தால் ஏசாமல்
தாயென்ற பெருமை தனை மனங்குளிரத் தந்தவளே
தாயென்ற பெருமை தனை மனங்குளிரத் தந்தவளே.."
தனக்கு தாயென்ற பெருமை தர வந்த மகளை எத்தனை அழகாக வர்ணித்து இருக்கிறார் ஆண் கவிஞர், தாயுள்ளத்தை உணர்ந்த படி. அவருக்குள்ளும் தாய்மை சுரந்ததால்தான் இப்படி ஒரு அருமையான பாடலைக் கொடுக்க முடிந்திருக்கும் இல்லையா.
"அழுதா அரும்புதிரும் அண்ணாந்தால் பொன்னுதிரும்
அழுதா அரும்புதிரும் அண்ணாந்தால் பொன்னுதிரும்
சிரிச்சா முத்துதிரும் வாய் திறந்தால் தேன் சிதரும்
சிரிச்சா முத்துதிரும் வாய் திறந்தால் தேன் சிதரும்
பிள்ளையைப் பெற்று விட்டால் போதுமா?
பேணி வளர்க்க வேணும் தெரியுமா?
பிள்ளையைப் பெற்று விட்டால் போதுமா?
பேணி வளர்க்க வேணும் தெரியுமா?
அல்லலைக் கண்டு மனசு அஞ்சுமா? குழந்தை
அழுவதைக் கேட்டு மனசு மிஞ்சுமா?
அல்லலைக் கண்டு மனசு அஞ்சுமா? குழந்தை
அழுவதைக் கேட்டு மனசு மிஞ்சுமா?
மண்ணுக்கு மரம் பாரமா
மரத்துக்கு இலை பாரமா?
கொடிக்குக் காய் பாரமா
பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா? "
ஒரு பிள்ளையை பத்துமாதம் சுமந்து பெற்றெடுப்பதோடு தாயின் கடமை முடிவதில்லை. அதன் ஒவ்வொரு அசைவையும், உணர்வுகளையும் புரிந்து நடப்பவளே தாய் என பொருள்பட உரைக்கும் வரிகள்.
மண் மரத்தை பாரமாக எண்ணாது மரம் இலைகளை பாரமாக ஒருபோதும் எண்ணாது கொடி மெல்லியதாக இருந்தாலும் காய்களை பாரமாக எண்ணாது அதுபோல தான் ஈன்ற குழந்தை எப்போதுமே தனக்கு பாரமாக இருக்காது என உதாரணங்களோடு பாடிய அர்த்தமுள்ள பாடல்.
நீங்களும் ஒரு முறை இந்தப் பாடலைக் கேட்டுப் பாருங்கள். கேட்டால் உங்கள் தாயின் அரவணைப்பும், தியாகமும் கண் முன்னே காட்சியாகும். இன்னொரு பாடலுடன் மீண்டும் சந்திப்போம்.
(இரா.காயத்ரி, பட்டதாரி ஆசிரியர், தருமபரி மாவட்டம்)