கோலி, விராத்தை ஓரங்கட்டுகிறார் கம்பீர்.. இதெல்லாம் நல்லதுக்கில்லை.. மனோஜ் திவாரி பாய்ச்சல்

Su.tha Arivalagan
Oct 07, 2025,11:22 AM IST

டெல்லி: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மீது ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அணியில் இருந்து மூத்த வீரர்களை வெளியேற்றுவதற்கான சூழலை கம்பீர் உருவாக்கிவிட்டதாக அவர்  குற்றம் சாட்டியுள்ளார்.


சமீப காலத்தில் அதிக அளவில் பேசுபொருளாக மாறியது - ரவிச்சந்திரன் அஸ்வின், விராட் கோலி, ஹோரித் சர்மா ஆகியோரின் அடுத்தடுத்த ஓய்வு அறிவிப்புகள்தான். பரவாயில்லை, ரிட்டயர்ட் ஆகி விட்டார்களே ஒரு வழியாக என்று கூறாமல், ஏன் இப்போது என்ற கேள்விதான் இவர்களது ஓய்வு அறிவிப்பின்போது அதிகம் எழுந்தது.


கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் பாதியில் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார். அதேபோல், ரோஹித் மற்றும் கோலி இருவரும் மே 2025-இல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.




இந்த நிலையில் கம்பீர் மீது குற்றம் சாட்டியுள்ளார் முன்னாள் வீரரான மனோஜ் திவாரி. இதுகுறித்து அவர் கூறுகையில், மூத்த வீரர்கள், அதாவது அஸ்வின், ரோஹித் அல்லது விராட் கோலி போன்றவர்கள் அணியில் இருந்தால், அவர்கள் பயிற்சியாளரை விட அதிக அனுபவம் கொண்டவர்கள். அவர்கள் ஏதேனும் ஒரு கருத்தில் உடன்படவில்லை என்றால், நிச்சயம் கேள்வி எழுப்புவார்கள். அதனால், இந்தக் குறிப்பிட்ட வீரர்கள் அணியில் இருக்கக் கூடாது என்று இவர் (கம்பீர்) உறுதி செய்கிறார்.


புதிய பயிற்சியாளர் பொறுப்பேற்றதிலிருந்து பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. அஸ்வின் ஓய்வு பெற்றுள்ளார், ரோஹித் மற்றும் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். இதெல்லாம் இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல. ரோஹித் மற்றும் விராட் கோலி இருவரும் இந்திய கிரிக்கெட்டுக்கு சிறந்த பங்களிப்பை வழங்கியவர்கள். இந்திய கிரிக்கெட்டை புதிய உயரத்துக்குக் கொண்டு சென்றவர்கள்.


2027 உலகக் கோப்பைக்கான திட்டங்களில் இருந்து ரோஹித் மற்றும் விராட் ஆகிய இருவரையும் கம்பீர் நீக்கினால் அது மிக மோசமான முடிவாக இருக்கும். வெள்ளை பந்து (White-ball format) போட்டிகளில் அவர்களின் முக்கியத்துவத்தை யாராலும் மறுக்க முடியாது என்றார் திவாரி.