கே.ஏ.செங்கோட்டையனைத் தொடர்ந்து.. தவெகவுக்குப் படையெடுக்க போகும் அரசியல் தலைகள்!
சென்னை: அரசியல் அனுபவம் பெரிதாக இல்லாமல், புதுக் குழந்தையாக அரசியல் களத்தில் பெரிய பெரிய கட்சிகளுக்கு தண்ணீர் காட்டி வரும் தவெகவுக்கு புது வரவாக பழுத்த அனுபவம் வாய்ந்த கே.ஏ. செங்கோட்டையன் வந்து சேர்ந்துள்ளது அக்கட்சியினருக்கு உற்சாகம் கொடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து மேலும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் தவெகவுக்கு வருவார்களா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
நடிகராக இருந்த விஜய் தற்போது அரசியல்வாதியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஒரு நடிகராக உச்சத்தில் இருந்தவர் விஜய். வசூலில் அவரது படங்கள் அடுத்தடுத்து சாதனையும் படைத்து வந்தன. உச்சநடிகராக வலம் வந்த அவர் பிற நடிகர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வந்தார். விஜய் படம் வந்தால் தியேட்டர்களில் திருவிழாக்கோலம்தான்.
அப்படிப்பட்ட விஜய் அரசியலுக்கு வந்த பிறகு அரசியலிலும் அதே திருவிழாக்கோலம் களை கட்டியுள்ளது. பெரிய பெரிய கட்சிகளுக்கெல்லாம் பெரும் மிரட்டலாக காட்சி தருகிறார் விஜய். அவரைப் பற்றிப் பேசாத அரசியல் தலைவர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு தினசரி விஜய்யும் அவரது கட்சியும் அதகளம் செய்து வருகிறார்கள்.
தவெகவுக்கு என்னதான் எதிர்பார்ப்பு இருந்தாலும், விஜய் குறித்த பரபரப்பும், விறுவிறுப்பும் இருந்தாலும் கூட அரசியல் அனுபவம் இல்லாத கட்சியாகத்தான் தவெக இருந்து வருகிறது. இதனால் அவர்களையும் அறியாமல் பல தவறுகளையும் செய்து வருகிறார்கள். அதை சரி செய்ய அங்கு அனுபவம் வாய்ந்த தலைவர்கள் இல்லை. இது ஒரு குறையாக இருந்த நிலையில் தற்போது அதை களையும் முயற்சியில் விஜய் இறங்கி விட்டதாக தெரிகிறது. அதன் வெளிப்பாடுதான் கே.ஏ.செங்கோட்டையனின் வருகை.
அதிமுகவில் முக்கியத் தலைவராக இருந்தவர் செங்கோட்டையன். எடப்பாடி பழனிச்சாமிக்கும் சீனியர். எம்ஜிஆர் காலத்து அரசியல் வாதி, ஜெயலலிதாவின் முதல் அமைச்சரவையிலேயே இடம் பெற்றவர். சிறந்த ஸ்டிராட்டஜிஸ்ட் என்று அறியப்பட்டவர். இப்படி பல பலங்களுடன் வலம் வந்தவர் செங்கோட்டையன். இவரை அதிமுக அதிரடியாக நீக்கிய நிலையில் தற்போது தவெகவுக்கு வந்து விட்டார். திமுகவே இவரை இழுக்க கடைசி வரை முயன்றதை நேற்று வரை பார்த்தோம். ஆனால் தனது நிலையில் உறுதியாக இருந்து தவெக பக்கம் வந்து விட்டார் செங்கோட்டையன்.
தவெகவுக்கு இப்போது ஒரு புது நிறம் வந்துள்ளது. செங்கோட்டையன் ஒரு முன்னாள் எம்எல்ஏ என்றால், அவருடன் இணைந்துள்ள திருப்பூர் சத்யபாமா முன்னாள் எம்.பி. ஆவார். இவர்களைத் தொடர்ந்து மேலும் பல அரசியல் தலைவர்களும் தவெகவுக்கு வருவார்களா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த தலைவர்களை கட்சிக்குள் கொண்டு வந்தால் கட்சிக்கும் ஒரு பலமாக இருக்கும், கட்சியினரையும் வழி நடத்துவது எளிது என்று விஜய்க்கு சொல்லப்பட்டுள்ளதாம். அவரது ரசிகர்களை தொண்டர்களாக மாற்ற இதுபோன்ற தலைவர்கள் தேவை என்பதும் விஜய்க்கு எடுத்துச் சொல்லப்பட்டுள்ளதாம்.
அந்த வகையில் விரைவில் அடுத்தடுத்து பல்வேறு கட்சிகளில் ஒதுக்கப்பட்டுள்ள மூத்த தலைவர்கள் பலர் தவெக பக்கம் திரும்பலாம் என்ற ஒரு எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.