மார்கழி 03ம் நாள் வழிபாடு : திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 03 வரிகள்

Su.tha Arivalagan
Dec 18, 2025,11:11 AM IST

மார்கழி மாதத்தின் இரண்டாம் நாள் வழிபாட்டில் பாட வேண்டிய திருப்பாவை மற்றும் திருவெம்பாவை பாடல்கள் மற்றும் அவற்றின் விளக்கங்கள் இதோ...


திருப்பாவை பாடல் 03 : 


ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி

நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீர் ஆடினால்,

தீங்கு இன்றி நாடு எல்லாம் திங்கள் மும்மாரி பெய்து

ஓங்கு பெறும் செந்நெல் ஊடு கயல் உகளப்

பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்

தேங்காதே புக்கு இருந்து சீர்த்த முலை பற்றி

வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்

நீங்காத செல்வம் நிறைந்து ஏலோர் எம்பாவாய்.


விளக்கம் : 


மூன்று உலகத்தையும் தன் காலால் அளந்த திருவிக்கிரமனின் நாமங்களைப் பாடி நாம் நோம்பிற்கு நீராடினால் நாடு முழுவதும் தீமை இல்லாமல் மாதம் மூன்று முறை மழை பெய்யும் அதனால் செந்நெல் வளர, நடுவே கயல் மீன்கள் துள்ளி விளையாடும். அழகிய நெய்தல் பூக்களில் வண்டுகள் உறங்கிக்கிடக்கும். அத்தகைய செழிப்பில், பெரிய பசுக்கள் வள்ளலைப்போல் குடம் குடமாக பாலை நிறைக்கின்றன. ஓங்கி உலகளந்த உத்தமனின் பெயரை சொல்லி பாடி நீராடி நோன்பிருந்து இத்தகைய செல்வங்களை எந்த நாளும் விட்டு நீங்காமல் பெற்று நிறைவோம் என்று ஆண்டாள் மங்களாசாசனம் செய்கிறாள்.




திருவெம்பாவை பாடல் 03 :


முத்தன்ன வெண்ணகையாய் முன்வந்தெதிரெழுந்தென்

அத்தன் ஆனந்தன் அமுதனென் றள்ளூறித்

தித்திக்கப் பேசுவாய் வந்துள் கடை திறவாய்

பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர்

புத்தடியோம் புன்மைதீர்த்தாட் கொண்டாற் பொல்லாதோ

எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ

சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை

இத்தனையும் வேண்டும் எமக்கேலோ ரெம்பாவாய்.


விளக்கம் : 


முத்துப் போன்ற வெள்ளை நிற பற்களைக் காட்டி அழகாக சிரிக்கும் பெண்ணே, சிவ பெருமான் மீதான தீராத அன்பும், பக்தியும் வைத்துள்ளதாக வாய் இனிக்க பேசுவாயே. ஆனால் அந்த சிவனை தரிசிக்க அழைக்க வந்தால் இப்படி தூங்கிக் கொண்டிருக்கிறாயே. வந்து உன்னுடைய வீட்டின் கதவை திற என்கிறாள் தோழி ஒருத்தி. அதற்கு வீட்டிற்குள் இருக்கும் பெண், நீங்கள் பல காலமாக ஈசன் மீது பக்தி செய்த வருகிறீர்கள். நான் பக்தி செய்வதற்கு புதியவள் என்பதால் சற்று கண் அயர்ந்து தூங்கி விட்டேன். அந்த தவறை மன்னிக்காமல் இப்படி கேலி பேசுவது சரியா? என கேட்கிறாள்.  அதற்கு வெளியில் இருக்கும் தோழிகள், நீ சிவன் மீது எத்தனை அன்பு வைத்துள்ளாய் என்பது எங்கள் அனைவருக்கும் தெரியும். நமக்குள் வீணாக பேசிக் கொண்டிருக்காமல் இது நம் சிவனை போற்றி துதிக்கின்ற நேரம் என்கிறாள்.