மார்கழி 02ம் நாள் வழிபாடு : திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 02 வரிகள்
மார்கழி மாதத்தின் இரண்டாம் நாள் வழிபாட்டில் பாட வேண்டிய திருப்பாவை மற்றும் திருவெம்பாவை பாடல்கள் மற்றும் அவற்றின் விளக்கங்கள் இதோ...
திருப்பாவை பாடல் 02 :
வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலை நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தானையும் கை காட்டி
உய்யுமாறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.
விளக்கம் :
பூமியில் வாழ்பவர்களே நம்முடைய பாவை நோன்புக்கு செய்ய வேண்டிய காரியங்களைக் கேளுங்கள்! பாற்கடலில் உறங்குகிற பகவானுடைய திருவடிகளை பாடுவோம். நெய், பால் இவற்றை உட்கொள்ள மாட்டோம். விடியற்காலை குளித்துவிட்டு, கண்ணுக்கு மை கிடையாது, கூந்தலுக்கு மலர் கிடையாது. செய்யக்கூடாத காரியங்களைச் செய்யமாட்டோம். கோள் சொல்லமாட்டோம். தானத்தையும் பிச்சையையும் எங்களால் முடிந்த வரை கொடுப்போம் என்று இவ்வாறெல்லாம் எண்ணி சந்தோஷப்படுவது நம் பாவை நோன்பு.
திருவெம்பாவை பாடல் 02 :
பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல் நாம்
பேசும்போது எப்போது இப் போது ஆர் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீ சீ இவையும் சிலவோ விளையாடி
ஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பு ஆர் யார் ஆர் ஏல் ஓர் எம்பாவாய்.
விளக்கம் :
சிறந்த அணிகளை அணிந்த அழகு நிறைந்தவளே! இரவும் பகலும் நாம் பேசும் பொழுது எப்பொழுதும் என் அன்பு, ஒளியான இறைவனுக்கு என்றுதானே கூறுவாய். ஆனால், எப்போது இந்த மலர்ப் படுக்கையின் மீது அன்பு வைத்தாயோ? என தோழி கிண்டல் செய்ய, உறங்கிக் கொண்டிருந்தவள் “பெண்களே!சீச்சி, நீங்கள் பேசும் இவையும் சிலவாகுமோ! என்னுடன் விளையாடிப் பழித்தற்குரிய சமயம் இதுதானோ? என பதிலளிக்கிறாள். அதற்குத் தோழிகள்“தேவர்களும் தாங்கிப் பிடிப்பதற்கு அஞ்சுகின்ற மலர் போன்ற திருவடியை அடியார்க்குக் கொடுத்தருள எழுந்தருளும் தில்லைச் சிற்றம்பலத்து ஈசனின் அன்புக்கு உரியவர்கள் அல்லவா நாம் ? அப்படிப்பட்ட நாம் தூங்கிக் கிடத்தல் தகுமா? எம்பாவாய், எழுந்திரு! “ என்று எழுப்புகின்றனர்.