மார்கழி திருவாதிரை நாளில் நடராசரின் தாண்டவம்!
- ஆ.வ. உமாதேவி
உலக இயக்கத்திற்கு காரணியாக இருப்பது இறைவனின் இயக்கமே. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களின் வாயிலாக உலகை இயங்கச் செய்து, ஈசன் திருநடனம் புரிகின்றார். இறைவனின் அசைவினால் தான் இவ்வுலகம் இயங்குகிறது என்பது புராணங்கள் எடுத்துரைக்கும் உண்மை. எனவேதான், "அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது. சிவனின்றி எதுவும் இசையாது" என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்.
சிவபெருமான் 108 நடனங்கள் புரிந்து இருப்பதாகவும் அவற்றுள் 48 நடனங்கள் ஈசன் தனியாக ஆடியது என்றும் புராணங்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் சிறப்பு வாய்ந்தது மார்கழி மாதத்தில் திருவாதிரை நாளில் வரும் தாண்டவம் என்னும் நடனம் ஆகும்.
அந்த நடன கோலத்தில் நடராஜர் காட்சியளிப்பதே ஆருத்ரா தரிசனம் ஆகும். இந்த நாளில் தில்லை நடராஜரின் திரு நடனத்தை காண்பதற்கு கண் கோடி வேண்டும்.
ஆருத்ரா என்பது, திருவாதிரை நட்சத்திரத்தின் வடமொழி பெயர் ஆகும். சிவனின் நட்சத்திரம் ஆருத்ரா ஆகும். ஆருத்ரா என்றால் சலனம் என்று பொருள். சலனம் தொடங்கியதும் சிருஷ்டி தொடங்கும் என்பது வேதவாக்கு அல்லவா!
தமிழ் மாத பௌர்ணமி தினங்கள் ஒவ்வொன்றும் ஒரு நட்சத்திரத்தோடு கூடி, பண்டிகை நாளாக கொண்டாடப்படுகிறது இதில் மிகவும் சிறப்பு வாய்ந்தது மார்கழி மாத பௌர்ணமியில் ஆருத்ரா நட்சத்திரத்தில் வரும் ஆருத்ரா தரிசனம் ஆகும். அந்நாளில், சிவபெருமானை தரிசிக்க தேவர்கள் ஒன்று கூடுவதாக ஐதீகம் உண்டு.
சிதம்பரத்தில் மிகச் சிறப்பாக இது கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் மூலவர் நடராஜரும் சிவகாமசுந்தரி அம்பா ளும் வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பது தனிச்சிறப்பாகும். வேறு எந்த கோவில்களிலும் இத்தகைய சிறப்பை காண இயலாது என்பதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் அந்நாளில் சிதம்பரத்திற்கு வருகை புரிவர்.
ஈசனின் திரு நடனத்தை அனைவரும் தரிசித்த வேளையில், சிவலோகத்தில் நிஷ்டையில் இருந்த வியாக்ரபாத முனிவரும் பதஞ்சலி முனிவரும் காண முடியாமல் போனது. அதனால் அவர்கள் இருவரும் தில்லை வனத்துக்கு வந்து ஈசனை வேண்டி, நெடுங்காலம் தவமிருந்தனர். அப்போது அவர்களுக்கு அருள் காட்சி தந்த ஈசன் அவர்களுக்காகவே தில்லையில் ஆடல் கூத்தனாக, பொன்னம்பலத்தில் காட்சி தந்து ஆனந்த நடனம் ஆடினார். இந்த நாளும் ஆருத்ரா புண்ணிய தினம்தான்.
புராணத்தில் இன்னொரு கதையும் உண்டு. ஏழை பக்தனான சேந்தனாரின் உண்மையான பக்தியை, உலகுக்கு வெளி காட்டவே சிவபெருமான் தரிசனம் தந்த திருவாதிரை நாளே ஆருத்ரா தரிசனம் ஆகும். சேந்தனாரின் வீட்டில் சிவபெருமான் அடியவராக வந்து, களி அமுதை உண்டார். அன்று மார்கழி திருவாதிரை நாள். எனவே தான் ஆருத்ரா தரிசன நாளில் சிவபெருமானுக்கு களி அமுது படைத்து உண்கிறோம். இக்கதையின் மூலம் ஏழையாக இருந்தாலும் இறைவன் மீது பற்று கொண்டவனுக்கு இறைவன் அருள் செய்வார் என்னும் கருத்தை அறியலாம்.
திரு உத்தரகோசமங்கை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பழமையான சிவன் கோயில் ஆகும். இங்குள்ள நடராஜர் சிலை மிகவும் விசேஷமானது." மண் தோன்றியபோதே மங்கை தோன்றியது" என்ற பழமொழி இந்த ஊருக்கு உண்டு. மாணிக்கவாசகரால் போற்றப்பட்ட தலமாகும். இலங்கை மன்னன் ராவணனின் மனைவி மண்டோதரியின் பெயர் கல்வெட்டுகளில் உள்ளதால், இதன் பழமை உறுதி செய்யப்படுகிறது. மரகத நடராஜருக்கு வெகு சிறப்பாக இந்நாளில் அபிஷேகமும் அலங்காரமும் வெகு விமர்சையாக செய்யப்படுகிறது. இது ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே காணக் கிடைக்கும் காட்சி ஆகும். சிவபெருமான் பார்வதிக்கு வேத ரகசியங்களை உரைத்ததால், இவ்வூர் இப்பெயர் பெற்றது. உத்தரம் (ரகசியம்)+ கோசம் (கூறுதல்)+ மங்கை (பார்வதி).
திருவள்ளூர்-அரக்கோணம் ரயில் தடத்தில் உள்ளது திரு ஆலங்காடு. திருத்தணியில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மிகப் பிரசித்தமான பழமையான புராதன கோயிலாகும். நடராச பெருமானின் 5 சபைகளில் ஒன்றான ரத்தின சபையாக திகழ்கிறது. காரைக்கால் அம்மையார் காலால் நடந்து வந்து, ஐயனை தரிசித்த ஸ்தலம் இதுவே.
இத்தலத்தில் இன்றும் காரைக்கால் அம்மையார் இறைவனின் காலடியில் வாழ்கிறார். திருஆலங்காட்டிலுள்ள நடராச தாண்டவம் ஊர்த்துவ தாண்டவம் என்று சொல்லப்படும். இங்கு ஆலமரம் தல விருச்சம் ஆகும். இங்குள்ள இறைவன் வ டாரன் ஈஸ்வரர், அம்மை, வண்டார் குழலி அம்மையார்.
ஒருமுறை சிவனுக்கும் காளிக்கும் நடன போட்டி நடந்தது. அதில் ஊர்த்துவ தாண்டவம் என்னும் நடனம் காலை மேலே நேராக தூக்கி ஆடுவதாகும். இறைவன் அவ்வாறு ஆடிய உடன் காளி வெட்கி தலை குனிந்தாள் என்பது புராணம். நடராசர் சன்னதிக்கு எதிரே காளியின் சன்னதி உள்ளது. முதலில் காளியை தரிசித்து விட்டு பின், ஐயனை தரிசிப்பது ஐதீகமாக கடைபிடிக்கப்படுகிறது. மார்கழி பௌர்ணமி நாளில் தரிசனம் செய்தால் எல்லா வகை இன்பங்களும் கிடைக்கும் என்கிறது தல புராணம். நால்வர் பாடிய பாடல் ஸ்தலமாகும்.
இங்கு ஆருத்ரா நாளில் இரவு முழுவதும் மிக பிரம்மாண்டமான முறையில் அபிஷேகம், விடிய விடிய நடைபெறும் அதைக் காண கண் கோடி வேண்டும். பழம் பெருமை வாய்ந்த இவ்வூருக்கு அருகில் நாங்கள் வசிப்பது நாங்கள் செய்த பாக்கியமே! வாய்ப்பு உள்ளவர்களும் வந்து தரிசித்து இறைவன் அருளை பெறுக.
(ஆ.வ. உமாதேவி, இடைநிலை ஆசிரியர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம், முருக்கம்பட்டு காலனியைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பணியாற்றுகிறார்)