கடலாடும் மாதம்.. மாசி மாதத்து சிறப்பு.. திருத்தணியில் பெருவிழா காணும் எம்பெருமான் முருகன்!

Su.tha Arivalagan
Feb 28, 2026,03:10 PM IST

- ஆ.வ. உமாதேவி


தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. அதுபோல மாசி மாதத்திற்கும் பல சிறப்புகள் இருக்கின்றன. மாசி மாதத்தை "கடலாடும் மாதம்" அல்லது "தீர்த்தமாடும் மாதம்" என்று கூறுவர். இந்த மாதம் இறை வழிபாட்டிற்கும் தான தர்மங்கள் செய்வதற்கும் ஏற்ற மாதமாக சொல்லப்படுகிறது. மகத்துவம் வாய்ந்த மாசி மாதத்தில் தான் மகா சிவராத்திரி, மாசி மகம் போன்ற சிறப்பான விசேஷங்கள் வருகின்றன. 


பௌர்ணமியும் மகம் நட்சத்திரமும் இணைந்து வரும் நாளை மாசி மகம் என்று போற்றிக் கொண்டாடுகிறோம். இது மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. இந்த மாசி மகம் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவிலில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இது பேச்சு வழக்கில் "மாமாங்கம் திருவிழா" என்று கூறப்படுகிறது. இந்நாளில் கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, நர்மதா, சிந்து, காவேரி, பிரம்மபுத்திரா போன்ற 12 நதிகள் தங்கள் பாவத்தை தீர்த்துக் கொள்ள பிரம்மதேவர் அறிவுரைப்படி, கும்பேஸ்வரர் கோவிலில் மகாமக குளத்திற்கு வருவதாக சொல்லப்படுகிறது. 


அதனால் அந்நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் அப்புனித குளத்தில் நீராடுவதற்கு என்றே கும்பகோணம் வருகின்றனர். அன்று இந்த குளத்தில் நீராடுபவர்களின் பாவங்கள் ஒழிந்துவிடும் என்று சொல்லப்படுகிறது. 




சேக்கிழார் பெருமான் அப்பர் பெருமான் போன்ற பெரியோர்கள் மகாமகம் குளத்தை பற்றியும் அதில் நீராடுதல் பற்றியும் பாடியுள்ளனர். இந்நாள் சிவபெருமானுக்கு மட்டுமல்ல முருகப்பெருமானுக்கும் சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. குழந்தை வரம் வேண்டுவோர் விரதம் இருக்கும் முக்கிய நாளாக முருகப்பெருமானுக்கு விளங்குகிறது. 


திருத்தணியில் 20.02.2026 முதல் 02.0 3. 2026 வரை மாசிப் பெருவிழா கொடியேற்றத்துடன் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் முருகப்பெருமான் மலை சுற்று வருவார். 27.02.2026 இரவு 7 மணிக்கு தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 28.02.2026  காலை 9:30 மணிக்கு யாளி வாகன உலா. இரவு ஒரு மணிக்கு குதிரை வாகனத்தில் உலா வருவார். அதனைத் தொடர்ந்து வள்ளியம்மை திருக்கல்யாணம் மிகவும் சிறப்பாக நடைபெறும். 


முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடான திருத்தணியில் மாசிப் பெருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும். பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானின் அருளை பெற அனைவரையும் அழைக்கின்றோம். 


(ஆ.வ. உமாதேவி, இடைநிலை ஆசிரியர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம், முருக்கம்பட்டு காலனியைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியி்ல் பணியாற்றுகிறார்)