படுத்து தான் பார்ப்போமே.. ஆரோக்கியத்துக்கு பலவித நன்மைகளை அளிக்கும் பாய்!
- அ.கோகிலா தேவி
சென்னை: ஆரோக்கியமான வாழ்விற்கு அக்கால மக்கள் பயன்படுத்தி வந்த பாயின் மகத்துவத்தை இக்காலத்திய ஆடம்பரமான பஞ்சு மெத்தைகளில் உறங்கும் பலர் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை. இயற்கையோடு இயைந்த வாழ்வுக்காக நம் முன்னோர்கள் கொண்டிருந்த பழக்கவழக்கங்களில், தரையில் பாய் விரித்துப் படுப்பதென்பது அறிவியல்பூர்வமான ஓர் அரிய முறையாகும்.
நம் முன்னோர்கள் பாயில் படுப்பதையே ஒரு வழக்கமாக கொண்டிருந்தனர். இதற்கு முக்கிய காரணம், பாயானது இயற்கையான மூலப்பொருட்களான கோரைப்புல் அல்லது தென்னை ஓலையில் இருந்து நெய்யப்படுவதால், இது நமது உடலில் உருவாகும் அதிகப்படியான உடல் சூட்டை உடனடியாக உள்வாங்கி, உடல் வெப்பநிலையை இயற்கையாகவே சீராக்க உதவுகிறது. இது ஒருவிதமான இயற்கை குளிரூட்டி போல செயல்படுகிறது.
பஞ்சு மெத்தைகள் பெரும்பாலும் வெப்பத்தைத் தேக்கி வைக்கும் தன்மை கொண்டவை. ஆனால், தரையில் கோரைப்பாயை விரித்து உறங்குவதால், அது தரை மற்றும் புல்லின் குளிர்ந்த தன்மையைப் பெற்று, உடல் சூடு குறைந்து, புத்துணர்ச்சி கிடைக்கிறது.
பாயில் சமநிலையில் படுப்பதன் மூலம், நமது உடலுக்கு சீரான ஓய்வும், நிம்மதியான உறக்கமும் கிடைக்கிறது. தரையில் படுக்கும்போது உடலின் அசைவுகள் சீராக இருப்பதால், இது வாத நோய்களை ஓரளவு கட்டுப்படுத்த உதவுகிறது என்று பாரம்பரிய வைத்திய முறைகள் கூறுகின்றன.
சமமான மேற்பரப்பில் படுப்பதால், உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் இரத்த ஓட்டம் தடையின்றிச் சீராகப் பாய்கிறது. அதேபோல, முதுகுத்தண்டு மற்றும் தசைப் பிடிப்புகள் கொண்டவர்களுக்கு, சற்று இறுக்கமான பாயின் அமைப்பு சிறந்த ஆதரவைக் கொடுத்து, தசைகளுக்கு முழுமையான ஓய்வை அளிக்கிறது.
சரியான உடல் சூடு குறைந்து, அமைதியான உறக்கம் கிடைப்பதால், அது நேரடியாக நமது மூளையின் செயல்பாட்டையும் பாதிக்கிறது. நிம்மதியான, ஆழ்ந்த உறக்கம் நினைவுகளை ஒருங்கிணைக்க உதவுகிறது. இதனால் நினைவுத்திறன் மேம்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இயற்கையான பாயில் படுப்பது ஒருவித அமைதியான உணர்வைக் கொடுத்து, மன அழுத்தத்தைக் (Stress) குறைத்து, மனதிற்கு நிம்மதியைத் தருகிறது. ஆகவே, நவீன பஞ்சு மெத்தைகளில் உறங்குவதைத் தவிர்த்துவிட்டு, நம் பாரம்பரியத்தின் அடையாளமான கோரைப்பாயில் உறங்கி, அதன் ஆரோக்கியமான பலன்களை உணர்ந்து தான் பார்ப்போமே!
(அ.கோகிலா தேவி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)