May 1: 'ஒவ்வொரு வேர்வைக்கும் வெற்றி வேர் வைக்கும்!'
- எம்.கே. திருப்பதி
உழைப்பின் அருமை
உலகின் பெருமை!
உற்பத்தித்தான் என்றும்
ஒழிக்கும் வறுமை!
உழைக்கும் வர்க்கம்
உறிஞ்சும் வர்க்கம்
உள்ளது உலகம்!
தாமரை இலை
தண்ணீர் போலே
பட்டும் படாமலும்
பரிதவித்து கிடைக்கிறது
பாட்டாளித் திலகம்!
எண்பு தெரிய
ஏங்கும் உடலை
அன்பு காட்டி
அழிப்பவரும் உண்டு!
கொம்பு மாடாய்
கடிது உழைக்கும்
தெம்பு மாட்டுக்கு
ஆறுதலும் அரவணைப்பும்
அளிப்பவரும் உண்டு!
தொழிலாளியிலும்
நிறங்கள் உண்டு!
கருப்பு வெள்ளை
காக்கி கச்சடா என்று!
நிறத்துக்கொப்ப
நீள்கிறது ...
வரும்படியும்
வணக்கம் தரும்படியும்!
உழைக்கும் வர்க்கம்
சவட்டுப் பிள்ளை!
தழைக்கும் வர்க்கம்
சமத்துப் பிள்ளை!
எங்கும் இதுதான்
எதார்த்த நிலை!
முகமன் கூறி
முறுவலிக்கும்
முதலாளி வலை!
தொழிலாளி வாழ்வு
வேழம் விழுங்கிய
விளாம்பழம்!
உழவுக்கு உதவாத
உவர் நிலம்!
வாங்கிய வேலைக்கு
வாங்கிய சம்பளம்
போதவில்லை!
வறிதினும் வறிது!
வாய் வயிறு
ஊதவில்லை!
அந்த
அன்றாடம் காய்ச்சி
அன்றாடம் காய்ச்சி...
அணைக்கிறான் பசியை!
ஆர் அறிவார்
அவன் ருசியை?
லாபத்தில் பங்கு
நல்ல பாங்கு!
உழைப்பின் உயர்வை
உள்ளத்தில் வாங்கு!
வியர்வையின் வெப்பு
விளைச்சலின் வேர்! அந்த
விருட்சம் வதங்காமல்
வார்த்திடு நீர்!
வணங்காமுடிகளே
வாழ்த்திடு நீர்!
வறியனுக்கும் வாய்ப்பளித்து
வாழ்ந்திடுவீர்!
'கொள்ளென கொடுப்பது
உயர்ந்தொன்று!' என்ற
கோவூர்க் கிழாரின்
கோட்பாட்டை கொள்ளுக!
கொண்டு
கொடி மரம் போல்
நெடுமரமாய் நில்லுக!
மலையில் பிறந்தாலும்
நிலையில் பிறழாமல்
நெடுவயல் நனைக்கும்
நதி போல....
தன்னலமில்லா
உன்னத உழைப்பின்
உண்மை உரு
உழைப்பாளர் போற்றுவோம்!
உழைப்பவரை
உயரத்துக்கு ஏற்றுவோம்!
'ஒவ்வொரு வேர்வைக்கும்
வெற்றி வேர் வைக்கும்!'
என்ற...
வாலி அய்யாவின்
வார்த்தையை
வான் ஏற்றுவோம்!
(எழுத்தாளர் எம்.கே. திருப்பதி.. திருப்பூரைச் சேர்ந்தவர். நூல் படிப்பதில் ஆர்வம். அதன் நீட்சியாக கொஞ்சம் கொஞ்சம் எழுத்துப்பணி. 98 ஆம் ஆண்டிலேயே 4 சிறுகதை, கவிதைகள், துணுக்குகள் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது. திருச்சி ஆல் இந்தியா வானொலி நிலையத்தில் கவிதை வாசித்திருக்கிறார். காவியக் கவிஞர் வாலி. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் தீவிர ரசிகன். திருவண்ணாமலை தடங்கள் பதிக்கும் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தில் நடந்த பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)