பிட்புல், ராட்வைலர் நாய்களை வளர்க்கக் கூடாது... மீறினால் 1 லட்சம் அபராதம்: மேயர் பிரியா!
சென்னை: சென்னை மாநகராட்சியில் பிட்புல் மற்றும் ராட்வைலர் இன நாய்களை வளர்ப்பதற்கு தடை விதித்து சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சமீபத்தில் நாய்களால் பதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதிலும், சிறுவர்கள், முதியவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக சென்னை மாநகராட்சியில் பிட்புல், ராட்வைலர் போன்ற நாய் இனங்களை வளர்க்க தடை செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாய்கள் கடித்து பாதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பிட்புல், ராட்வைலர் நாய்களை புதிதாக வாங்கி வளர்ப்பவர்களுக்கு ரூ. ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் நாளை முதல் அமலுக்கு வருகின்றன.
தடை செய்யப்பட்ட நாய் இனங்களை வளர்க்க கூடாது. நாளை முதல் ராட்வைலர், பிட்புல் ரக நாய்களுக்கு உரிமை பெற விண்ணப்பிப்பதற்கும் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ராட்வீலர், பிட்புல் நாய்கள் இனங்களை வைத்திருப்பவர்கள் உரிய விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். செல்லப் பிராணிகளை வளர்ப்போர் அனைவரும் கட்டாயம் உரிமம் பெற்றிருக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.