மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மருத்துவமனையில் அனுமதி.. இன்று வீடு திரும்புவதாக தகவல்..!
சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொண்டர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
மதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் எம்பியுமான வைகோ, அவ்வப்போது உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.சமீபத்தில் இவர் வீட்டில் கீழே வழுக்கி விழுந்து தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் என்பது நினைவிருக்கலாம்.
அந்த வகையில் தற்போது மீண்டும் இரவு வீட்டில் தவறி விழுந்ததில் கை விரலில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது மதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சிகிச்சை பெற்று வரும் வைகோவின் உடல்நிலை குறித்து மருத்துவ தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. அதே சமயத்தில் இன்று பூரண நலம் பெற்று வீடு திரும்புவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.