அன்பு வைகோவுக்கு.. பதவி திமுகவுக்கு.. மதிமுக எம்எல்ஏ எடுத்த திடீர் முடிவு!

Su.tha Arivalagan
Jun 28, 2026,12:48 PM IST

சென்னை: முதல்வர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்' கட்சிக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தனது ஆதரவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆனால் அதன் இரு எம்எல்ஏக்களும் பதவியை ராஜினாமா செய்ய மறுத்து விட்டதால் மதிமுக தரப்பு பின்னடைவைச் சந்தித்துள்ளது.


முன்னதாக இது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், வரவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு மதிமுக முழு ஆதரவை வழங்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும், அடுத்ததாக நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும் தவெக-வுடன் சுமுகமான தோழமை மற்றும் கூட்டணி ஏற்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மதிமுக மேற்கொள்ளும் என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.


திமுக கூட்டணியில் இருந்து விலகல் :


திமுக கூட்டணியில் நீடிப்பதா, வெளியேறுவதா என்பது குறித்து கடந்த 2 நாட்களாக மதிமுக.,வில் ஆலோசனை நடைபெற்று வந்தது. நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்திற்கு பிறகு, திமுக.,யில் இருந்து வெளியேறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. கட்சியின் பொதுக் கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.


அதைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது பேசப்பட்ட சில முக்கிய அரசியல் நகர்வுகள் குறித்து வைகோ தற்பொழுது விரிவாகப் பகிர்ந்துள்ளார். அவர் பேசுகையில், தற்போதைய சூழலில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தால், அந்தத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும் என்றும், அப்படி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் தவெக தலைவர் விஜய் நேரில் வந்து எங்களுக்காக (மதிமுக-விற்காக) தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன் என்று உறுதியளித்ததாகக் குறிப்பிட்டார்.




கைவிட்ட 2 எம்எம்ஏ.,க்கள்:


ஆனால் வைகோ எதிர்பார்த்தபடி நடக்கவில்லை. அதாவது மதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட இரு எம்எல்ஏக்களும் பதவியை ராஜினாமா செய்ய மறுத்து விட்டனராம். இதில் சீர்காழி எம்எல்ஏ செந்தில்செல்வன் நான் மதிமுகவே கிடையாது, திமுக உறுப்பினர் என்று ஏற்கனவே கூறி விட்டார். மற்றவரான கடையநல்லூர் ராஜேந்திரன் தான் வைகோ மீது மிகுந்த அன்பும் மரியாதையும் வைத்திருப்பதாகவும், அதேசமயம், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை என்றும் கூறி விட்டார்.


வைகோ, தங்களது கட்சியின் இரண்டு முக்கிய சட்டமன்ற உறுப்பினர்களிடம் இந்த விவகாரம் குறித்துப் பேசிய போது, அவர்கள் எடுத்த முடிவுகளையும் செய்தியாளர்களிடம் பகிர்ந்துள்ளார். இரண்டு எம்.எல்.ஏ-க்களிடம் வைகோ இந்தத் திட்டத்தை முன்வைத்த போது, செந்தில் செல்வன் இதற்கு எவ்விதப் பதிலும் கூறாமல் தவிர்த்துவிட்டார். மாறாக, தான் "திமுகவிலேயேதான் தொடரப் போகிறேன்" என்று கூறி விலகிவிட்டதாக வைகோ தெரிவித்தார். 


துணிந்து முடிவெடுத்த வைகோ :


மற்றொரு எம்.எல்.ஏ-வான ராஜேந்திரன், "நான் தொடர்ந்து மதிமுக உறுப்பினராகவே நீடிப்பேன், ஆனால் தற்போதைக்கு எம்.எல்.ஏ பதவியைத் துறக்காமல் தொடர்ந்து மக்கள் பணியாற்றுவேன்" என்று தனது தரப்பு விளக்கத்தைக் கொடுத்துள்ளதாக வைகோ சுட்டிக்காட்டினார்.


முதல்வர் விஜய் சொன்னது போல் 2 எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா செய்தால், தவெக உடன் கூட்டணியை அறிவிக்க வைகோ முடிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா செய்த மறுத்த போதிலும், துணிந்து தவெக.,விற்கு ஆதரவு அளிப்பதாக வைகோ அறிவித்துள்ளார்.