மேகதாது அணை கட்டுவது ஏன்? கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் புதிய விளக்கம்

Su.tha Arivalagan
Nov 14, 2026,02:36 PM IST

பெங்களூரு: உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய 177 டிஎம்சி தண்ணீரைத் தடையின்றி வழங்குவதற்காகவே மேகதாது அணை கட்டப்படுவதாக கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். 


காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் புதிய அணை கட்டுவதற்குக் கர்நாடக அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்குத் தமிழ்நாடு அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், மேகதாது அணை கட்டப்படும் எனத் தான் கூறிய கருத்திற்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் வெளியிட்ட கண்டனம் குறித்து டி.கே. சிவக்குமார் பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மேகதாது அணை கட்டப்படும் எனக் கூறியதற்காக மாணிக்கம் தாகூர் வெளியிட்ட கண்டனத்தைத் தான் ஒருபோதும் பொருட்படுத்தவில்லை என்று திட்டவட்டமாகக் கூறினார். 


மேலும், யார் கண்டனம் தெரிவித்தால் என்ன? கர்நாடக மாநில நலனுக்காக மேகதாது அணை நிச்சயம் கட்டப்படும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.   தொடர்ந்து பேசிய அவர், யார் எதிர்ப்பு தெரிவித்தாலும் அல்லது கண்டனம் தெரிவித்தாலும், நாட்டின் சட்டத்தை அனைவரும் மதித்துத்தான் ஆக வேண்டும் எனக் குறிப்பிட்டார். காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பைச் சுட்டிக்காட்டிய டி.கே. சிவக்குமார், தமிழ்நாட்டிற்கு 177 டிஎம்சி தண்ணீர் கொடுக்க வேண்டும் என்பது தான் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பாகும் என்று நினைவுகூர்ந்தார்.  




அந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு உரிய 177 டிஎம்சி தண்ணீரைக் கொடுக்க வேண்டும் என்றால், மேகதாது அணை கட்டப்பட வேண்டியது அவசியம் என்று அவர் வாதிட்டார். மேகதாது அணையைக் கட்டினால் மட்டுமே தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய 177 டிஎம்சி தண்ணீரைச் சரியாக வழங்க இயலும் என்றும் டி.கே. சிவக்குமார் விளக்கமளித்தார். 


காவிரி விவகாரத்தில் ஒரே கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களிடையே ஏற்பட்டுள்ள இந்தக் கருத்து மோதல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலனைப் பாதிக்கும் வகையில் மேகதாது அணை அமைந்துவிடும் எனத் தமிழ்நாடு தரப்பு அச்சம் தெரிவித்து வரும் சூழலில், தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் வழங்கவே இந்த அணை கட்டப்படுகிறது எனக் கர்நாடக முதலமைச்சர் கூறியிருப்பது புதிய விவாதங்களைத் தூண்டியுள்ளது.