அப்பாவுக்கு!

Su.tha Arivalagan
Nov 23, 2026,10:14 AM IST

- "மலைமலர்" கி.மேனகா


உன் தாயின் பாரம் குறைக்க

குழந்தைத் தொழிலாளி ஆனாய்.....


அன்று இன்பத்தை இழந்து போனாய்.....


உன் பிஞ்சு விரல்களால் நீ 

தொட்ட செய்தித்தாளும்


மளிகைக்கடையின் 

பொருள் சேமிக்கும்

பொட்டலங்களானது.....


உன் கனவுகளும் கடைவீதியில்

பயணித்தது கால்வயிறு கஞ்சிக்காக..




காரணம் என்னவோ நீ தாய்க்கு

தலைமகன் என்பதால்.....


வாலிபம் வலுப்பெறும்போது

வழிமாறினாய்....

திடீர் திருமணம் திடுக்கிட்டாய்....


சுமைகள்

கூடியதால் உன்முதுகும்

வளைந்த மூங்கிலானது........


ஆனாலும் புல்லாங்குழல் இசையாக


மூன்று பிள்ளைகளின் குரல் கேட்டாய்

அப்பா...அப்பா....அப்பா....


அகவை நாற்பதை கடக்கும்போது 

கடவுளுக்கும் பிடித்த மகனாய் ஆனாய் போல.....


கட்டிய கட்டடங்கள் எல்லாம் 

உன் பெயர் சொல்லியது...


நீ சிறந்த கட்டடத் தொழிலாளி என்று.....


நீ இறந்த பின்!


(கி.மேனகா B.A, B.Ed, M.A. கணவர் மோகன்தாஸ் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் ஏற்காடு மலை நகரில் வசித்து வருகிறார். தமிழ் ஆசிரியர். கவிதை, கதை எழுதுவதில் ஆர்வம் உடையவர்)