காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால்..மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு ..!
சென்னை: காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 6,233 கன அடியிலிருந்து 9683 கன அடியாக அதிகரித்துள்ளது.
மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. குறிப்பாக வட தமிழகத்திலும், தென் தமிழகத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வெயில் தலை காட்டாமல் வானம் மேகமூட்டத்துடன் இதமான சூழல் நிலவுகிறது. அக்னி நட்சத்திரம் கால கட்டத்தில் வெயில் குறைந்து மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியுடன் கோடை விடுமுறை நாட்களை கொண்டாடி வருகின்றனர்.
அதேபோல் தென்மேற்கு பருவமழையும் முன்கூட்டியே தொடங்கியுள்ளதால் கேரளா, கர்நாடகா, பகுதிகளிலும், கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வரும் தொடர் மழை காரணமாக, ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நேற்று நீர்வரத்து 5000 கன அடியாக வந்து கொண்டிருந்த நிலையில், இன்று 8000 கன அடியாக அதிகரித்துள்ளது.
இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 6,233 அடியிலிருந்து 9,683 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 109.33 அடியாக அதிகரித்துள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தற்போது அணையின் நீர் இருப்பு 77.462 டிஎம்சி ஆக உள்ளது.