வசவாளர்களை வாழ்க என சொல்லலாம்.. ஆனால் ஆபாசநிதிகளை.. அமைச்சர் என்.ஆனந்த் கண்டனம்

Su.tha Arivalagan
Aug 04, 2026,09:40 AM IST

சென்னை:  எதிர்க்கட்சித் தலைவர் என்ற மாண்பும் மரபும் மிக்க மிகப்பெரிய பொறுப்பை உணராமல், வாய்க்கு வந்தபடி பேசிய ஒருவரை என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை. தன் தாத்தாவும் தந்தையும் வகித்தும்கூடவா முதல்வர் பதவியின் தகுதியும் தராதரமும் தெரியாமல் ஒருவர் இருக்க முடியும்? என்று சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான என். ஆனந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.


தஞ்சையில் நடந்த திமுக போராட்டத்தின்போது உதயநிதி ஸ்டாலின் பேசியது சர்ச்சையாகியுள்ளது. அவருக்கு எதிராக தவெக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் தரப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தவெக போராட்டத்தை அறிவித்துள்ளது.


இந்த நிலையில் தவெக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான என். ஆனந்த வெளியிட்டுள்ள அறிக்கை:




அவை அடக்கமும் நாவடக்கமும் இல்லாத ஒருவரா நம் தமிழகத்தின் துணைமுதல்வராக இருந்திருக்க முடியும்?. மக்கள் மத்தியில் இத்தகையக் கேள்விகள் இமாலய அளவிற்கு எழுந்துள்ளன. எல்லை மீறி இழிவாகப் பேசியவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் ?.


Decent Approach - Decent Attack கற்றுக்கொடுத்து எங்களைக் கட்டுப்படுத்தி வளர்க்கும் மக்கள் விரும்பும் முதல்வரான நம் வெற்றித் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை இப்படி அநாவசியமாகவும் அநாகரிகமாகவும் தொட்டவர்கள் நிலை என்னவாயிற்று என்பதை யாராக இருந்தாலும் உணர்ந்தே ஆக வேண்டும். 

மக்கள் உணர்த்தியே தீருவர். அதில் மாற்றமும் இல்லை. மாற்றுக் கருத்தும் இல்லை.


அமைதி காக்கச் சொல்லி எங்கள் தலைவர் தளபதியின் நாகரிக வளர்ப்பு எங்களைத் தடுக்கிறது. வேறு என்ன சொல்ல?.


அறிஞர் அண்ணா பாணியில் ‘வசவாளர்கள் வாழ்க’ என்று சொல்லலாம். ஆனால், ஆபாசநிதிகளை?. 


மாண்பும் மரியாதையும் தகுதியும் தராதரமும் மிக்க எங்கள் தலைவர் தளபதி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சொல்வதுபோல மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர். யாரும் மறந்துவிட வேண்டாம் என்று எச்சரிக்கிறோம் என்று கூறியுள்ளார்.