கே. என். நேரு வசம் 41 தொகுதிகள் மட்டுமல்ல.. திமுகவின் மொத்தக் கோட்டையுமே இருக்கு!
சென்னை: அமைச்சர் கே. என். நேருவிடம் 41 தொகுதிகளை திமுக தலைமை ஒப்படைத்துள்ளது. தேர்தலில் அங்கு அவர் பணியாற்றுவதை சீர்குலைக்கவே இப்போது அவரது துறையில் ஊழல் நடந்து விட்டதாக அமலாக்கத்துறை மூலம் குடைச்சல் கொடுக்கப்படுவதாக திமுக குற்றம் சாட்டியுள்ள நிலையில், கே.என். நேருவிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பது கிட்டத்தட்ட 50 முக்கியமான தொகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் திமுகவின் கோட்டையாக விளங்கி வரும் டெல்டா மாவட்டங்கள்தான் அமைச்சர் நேருவின் கையில் கொடுக்கப்பட்டுள்ளது. திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டனம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள சட்டசபைத் தொகுதிகள்தான் கே.என். நேருவின் கையில் திமுக தலைமையால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொகுதிகளில் பல முக்கியமான திமுக தலைவர்கள் தொடர்ச்சியாக சட்டசபைக்குத் தேர்வாகி வருகிறார்கள். மறைந்த கலைஞர் கருணாநிதியின் பிறந்த ஊரான திருக்குவளை அடங்கிய திருவாரூர் இங்குதான் வருகிறது. திருச்சியிலிருந்து பல மூத்த தலைவர்கள் திமுக சார்பில் சட்டசபைக்குத் தேர்வானவர்கள், அமைச்சர்களாக இருந்தவர்கள்.
காவிரி டெல்டா பாசன மாவட்டங்கள் எப்போதுமே திமுகவுக்கு லம்ப்பாக வெற்றி தேடிக் கொடுப்பவை. திமுகவின் கோட்டையாக திகழ்பவை.
இதில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி மேற்கு, திருச்சிராப்பள்ளி கிழக்கு,
திருவெறும்பூர், இலால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் ஆகிய தொகுதிகள் உள்ளன.
பெரம்பலூர் - பெரம்பலூர், குன்னம்
அரியலூர் - அரியலூர், ஜெயங்கொண்டம்
கடலூர் - திட்டக்குடி, விருத்தாச்சலம், நெய்வேலி, பண்ருட்டி, கடலூர், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம்,
காட்டுமன்னார்கோயில்
நாகப்பட்டினம் - நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதாரண்யம்
மயிலாடுதுறை - சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார்
திருவாரூர் - திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, திருவாரூர், நன்னிலம்
தஞ்சாவூர் - திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம், திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை,
பேராவூரணி
புதுக்கோட்டை - கந்தர்வக்கோட்டை, விராலிமலை, புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி
இப்படிப்பட்ட முக்கிய மண்டலத்தைப் பொறுப்பில் வைத்துள்ள கே. என். நேருவுக்கு தற்போது நகராட்சித்துறை மூலம் விவகாரம் வெடித்துள்ளது திமுக வட்டாரத்தை சலசலப்புக்குள்ளாக்கியுள்ளது. அமலாக்கத்துறை மூலம் நெருக்கடி எப்படி வரும், அதை எப்படி திமுக சமாளிக்கும், கே. என். நேருவின் பணிகள் முடக்கப்பட்டால் அதை சமாளிக்க திமுக கையில் வைத்துள்ள மாற்று வழி என்ன என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு வேளை அமைச்சர் கே. என். நேருவால் இந்த மாவட்டங்களில் தேர்தல் பணிகளைப் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டால் அமைச்சர் அன்பில் மகேஷ், டிஆர்பி ராஜா போன்றோர் வசம் இந்த வேலைகள் ஒப்படைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.