Thoothukudi Airport.. தூத்துக்குடி விமான நிலைய பெயரை மாற்ற அமைச்சர் எல். முருகன் கோரிக்கை

Su.tha Arivalagan
Dec 29, 2025,05:42 PM IST

சென்னை: தூத்துக்குடி நகரில் அமைந்துள்ள விமான நிலையத்தின் பெயரை Tuticorin Airport என்று இல்லாமல் Thoothukudi Airport என்று அதன் அசல் பெயரிலேயே அழைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய செய்தி விளம்பரத்துறை இணை அமைச்சர் எல். முருகன், மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.


இதுதொடர்பாக அமைச்சர் எல். முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவு:


பிரதமர் நரேந்திர மோடி ஜி தலைமையிலான மத்திய அரசு கடந்த 11 ஆண்டுகளில் நாடு முழுவதும் விமானப் போக்குவரத்தை விரிவுபடுத்தவும், விமான போக்குவரத்துக் கட்டமைப்பை வலிமைப்படுத்தவும் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றது. 


குறிப்பாக, தமிழகத்தில் சென்னை, கோவை, தூத்துக்குடி விமான நிலையங்களில் பெரிய அளவில் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், திருச்சி மற்றும் மதுரை விமான நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. 




இந்நிலையில், மாண்புமிகு மத்திய விமானப் போக்குரவத்துத் துறை அமைச்சர் கிஞ்சரப்பு ராம் மோகன் நாயுடுவைசந்தித்து, தமிழகத்தில் விமான நிலையங்களில் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் விமான நிலைய பெயர் மாற்றத்திற்கான சில கோரிக்கைளை முன்வைத்தேன்.


அதன் வகையில், கோவை விமான நிலையத்தைப் பார்வையிட்டு, அங்கு நடைபெற்று வரும் விமான நிலைய விரிவாக்கப் பணிகளை விரைந்து செயல்படுத்த கோரிக்கை விடுத்ததுடன், சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு கூடுதலான வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டேன்.


மேலும், தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து பிற நகரங்களுக்கு விமான சேவையை விரிவுபடுத்துமாறு கேட்டுக் கொண்டதுடன், ‘Tuticorin’ என்ற பெயரினை, ‘தூத்துக்குடி விமான நிலையம்’ என்று மாற்றம் செய்வதற்கான கோரிக்கையையும் இந்தச் சந்திப்பின் போது முன்வைத்தேன் என்று தெரிவித்துள்ளார்.