ஆம்புலன்ஸ் செல்லும் வழியில் கூட்டத்தை போட்டுவிட்டு ஓட்டுனரை மிரட்டுவதா?: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை: முன்னாள் முதல்வர் எட்பபாடி பழனிச்சாமி ஆம்புலன்ஸ் செல்லும் வழியில் கூட்டத்தை போட்டுவிட்டு மிரட்டுவது அநாகரிகமான செயல் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை காப்போம் மக்களை மீட்போம் என்ற பெயரில் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டிற்கு எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி என் வாகனம் நின்றிருந்த இடத்தில் ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. அதில் நோயாளி யாரும் இல்லை என்று கூறியிருந்தார்.
இது குறித்து இன்று செய்தியாளர்கள் அமைச்சர் மா.சுப்பிரமணியிடம் கேள்வி எழுப்பினர். அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், நானும் அந்த காட்சிகளை பார்த்தேன். நான் வரும் இடங்களில் எல்லாம் ஆம்புலன்ஸ் வருகிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறுவது வேடிக்கையாக உள்ளது. எடப்பாடி பழனிசாமி மக்களின் ஆதரவுகளை பெற பிரதான சாலையில் பிரச்சாரம் செய்து வருகிறார். கடைசியில் அவர் செல்லும் இடங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் விடப்படுவதாக சொல்கிறார்.
பொதுவாக தமிழகத்தில் 1330 ஆம்புலன்ஸ்கள் உள்ளன. இந்த 108 வாகனங்கள் அனைத்தும் மக்களின் உயிர்காக்கும் சேவையை செய்து வருகிறது. மேலும் இந்த ஆம்புலன்ஸ் மூலம் எங்கு விபத்து நடக்கிறதோ அங்கு குறிப்பிட்ட சில வினாடிக்குள் கொண்டு சென்று மக்கள் உயிரை காப்பாற்ற வேண்டும் என்பதுதான் அவர்களுடைய பணி. தமிழ்நாட்டில் இருக்கும் ஆம்புலன்ஸ் சேவை போன்று வேறு எந்த மாநிலத்திலும் இல்லை என்று அனைவராலும் பாராட்டப்படுகிறது.
இந்நிலையில், ஆம்புலன்ஸ் வரும் வழியில் கூட்டத்தை நடத்திவிட்டு தான் வரும் வழியில் ஆம்புலன்ஸ் விடப்படுவதாக எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். அரண்டவன் கண்ணுக்கு மிரண்டதெல்லாம் பேய் என்பது போல ஆம்புலன்ஸை பார்த்தாலே அவருக்கு வேறு ஏதோ ஞாபகம் வருகிறது போல. ஒரு முன்னாள் முதல்வர் மிரட்டும் தொனியில் பேசுவது அநாகரீகமான செயல் என்று தெரிவித்துள்ளார்.