செவிலியர்களுக்கு காலி இடங்கள் இருந்தால் மட்டுமே பணி வழங்க முடியும்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்
சென்னை: போராட்டம் நடத்துவது செவிலியர்களின் உரிமை. ஆனால், காலி இடங்கள் இருந்தால் மட்டுமே பணி வழங்க முடியும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
பல்வேறு கோரிக்கையகளை வலியுறுத்தி தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு பல்வேறு மாவட்டங்களை சார்ந்த செவிலியர்கள் கலந்து கொண்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் மாலையில் அறிவுறுத்தினார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் கலைந்து செல்ல மறுப்பு தெரிவித்தனர்.
இதனால், போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து கிளாம்பாக்கத்தில் இறக்கி விட்டு சென்றனர். ஆனால், செவிலயர்கள் அங்கேயும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் செவியர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுட்டனர். பேச்சு வார்த்தையும் தோல்வியுற்றது.
இந்நிலையில், காலி இடங்கள் இருந்தால் மட்டுமே பணி வழங்க முடியும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், போராட்டம் நடத்துவது செவிலியர்களின் உரிமை. ஆனால் விதிமுறைகளை தெரிந்துகொள்ள வேண்டும். இந்த அரசு யாரையும் கைவிடாது. 8 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களுக்கு வேலை வழங்கப்படாமல் உள்ளது. செவிலியர் பணியில் காலி இடங்கள் இருந்தால் மட்டுமே பணி வழங்க முடியும். செவிலியர் பணிக்கு தற்போது காலி பணியிடங்களே இல்லாத நிலை உள்ளது. ஒப்பந்த செவிலியர்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் பணி நிரந்தரம் வழங்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.