யாரையும் நாங்கள் அழைக்கவில்லை.. குதிரை பேர புகாருக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதில்!
Jul 14, 2026,03:01 PM IST
சென்னை: தமிழக அரசியலில் தற்போது நிலவி வரும் பரபரப்பான சூழலுக்கு மத்தியில், எதிர்க்கட்சியினரின் "குதிரை பேரம்" என்ற குற்றச்சாட்டுக்குத் மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல்குமார் மிகத் தெளிவான விளக்கத்தை அளித்துள்ளார்.
"நாங்கள் யாரையும் வலிய வந்து எங்கள் கூட்டணிக்கு அழைக்கவில்லை" என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
அரசியலில் சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ.-க்கள்) தங்களது கட்சிகளை விட்டு விலகும் போது, எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து குதிரை பேரக் குற்றச்சாட்டுகள் எழுவது வழக்கமாகிவிட்டது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், குதிரை பேரம் என்பதற்கான உண்மையான விளக்கத்தை முன்வைத்தார். அவர் பேசுகையில், "எம்.எல்.ஏ.-க்களைப் பணம் கொடுத்து விலைக்கு வாங்க முயற்சி செய்தால் தான் அதனை 'குதிரை பேரம்' என்று சொல்ல வேண்டும். ஆனால், இங்கே நடப்பது அதுவல்ல."
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் தலைமையின் கீழ் செயல்பட விரும்பாமல், அங்கிருந்து விலக நினைப்பது அந்தந்த மக்கள் பிரதிநிதிகளின் தனிப்பட்ட விருப்பம் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார். "மு.க.ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் தலைமையையும், அவர்களின் செயல்பாடுகளையும் ஏற்றுக்கொள்ள முடியாமல், தங்களின் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு வெளியே வருவது குதிரை பேரம் ஆகாது. அது முற்றிலும் அவர்களின் தனிப்பட்ட அரசியல் முடிவு" என்று அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், பிற கட்சிகளில் இருந்து அதிருப்தி அடைந்து வெளியேறுபவர்களைத் தடுத்து நிறுத்த முடியாது என்றும், அவர்களைத் தங்களது கட்சியில் இணைத்துக் கொள்வதில் தவறில்லை என்றும் வாதிட்டார். "நாங்கள் யாரையும் எங்களுடன் இணையுமாறு வலியச் சென்று அழைக்கவில்லை. ஆனால், தாங்களாகவே முன்வந்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, எங்களுடன் இணைய வருபவர்களை 'எங்கள் கட்சியில் சேர்க்க முடியாது' என்று எப்படிக் கூறி கதவுகளை அடைக்க முடியும்? அவ்வாறு வருபவர்களைத் தாராளமாக வரவேற்கத்தான் செய்வோம்" என்று அதிரடியாகத் தெரிவித்தார்.
அமைச்சர் நிர்மல்குமாரின் இந்தப் பேட்டி தற்போது தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. எதிர்க்கட்சியினரின் தொடர் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், அதே நேரத்தில் மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி வரத் தயங்குபவர்களுக்கு மறைமுகமாகப் பச்சைக்கொடி காட்டும் வகையிலும் இவரது கருத்து அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.