கடந்த காலங்களில் நடந்தது சாத்தான்களின் ஆட்சி... சாத்தான்குளம் சம்பவமே சாட்சி... அமைச்சர் சேகர்பாபு!
May 20, 2025,06:49 PM IST
சென்னை: கடந்த காலங்களில் நடந்தது சாத்தான்களின் ஆட்சி. அதற்கு சாத்தான்குளம் சம்பவமே சாட்சி என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று பெள்ளாச்சி சம்பவம் குறித்து ஒரு அறிக்கை வெயிட்டிருந்தார். அந்த அறிக்கையில், பொள்ளாச்சி பொள்ளாச்சி என்று மேடைதோறும் கூவிய முக ஸ்டாலின் அவர்களே- உங்கள் அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி தானே? என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், துப்பு கெட்ட ஆட்சிக்கு தூத்துக்குடியை சாட்சி என்று சொல்லி இருக்கிறோம். பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி என்றும் சொல்லி இருக்கிறோம். ஆட்சியைப் பொருத்தவரை தவறு நடக்கும் போது அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தான் குற்றம் சாட்ட வேண்டும்.
முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு எந்த பாகுபாடும் கிடையாது. தவறு யார் இழைத்திருந்தாலும், சொந்த கட்சிக்காரரே தவறு செய்திருந்தாலும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே முதல்வர் ஸ்டாலினின் நிலைப்பாடு. இது நீதியின் சாட்சி. சட்டத்தின் ஆட்சி. கடந்த காலங்களில் நடந்தது சாத்தான்களின் ஆட்சி, அதற்கு சாத்தான் குளம் சம்பவமே சாட்சி என்று பதில் அளித்துள்ளார்.