எதிர்க்கட்சித் தலைவர் சங்கிகள்... எழுதிக் கொடுப்பதை அப்படியே வாசித்து வருகிறார்: அமைச்சர் சேகர்பாபு

Meenakshi
Jul 10, 2025,01:11 PM IST

சென்னை:  இருக்கிற எதிர்க்கட்சித் தலைவர் சங்கிகள் கூட்டம் எழுதிக் கொடுப்பதை அப்படியே வாசித்து வருகிறார் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.


சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், அன்னம் தரும் அமுத கரங்கள் நிகழ்ச்சி மூலம் 141 வது நாளாக 1200 மக்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டிருக்கிறது. எத்தனை இடையூறுகள் வந்தாலும் இந்த நிகழ்ச்சி ஓராண்டை நிச்சயமாக நிறைவு செய்யும். இந்த ஆட்சி பொறுப்பெற்ற பிறகுதான் அன்னதானம் அதிகரித்திருக்கிறது.


இந்த திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கிட்டத்தட்ட 132 கோடி செலவில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செயல்பட்டு கொண்டிருக்கின்ற 25 பள்ளிகள், ஒரு பாலிடெக்னிக் கல்லூரி, ஒன்பது கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இவைகளில் பயிலுகின்ற 22,450 மாணவர்களுக்கு தேவையான புதிய வகுப்பறைகள் ஆய்வரங்கங்கள் நூலகங்கள் என கூடுதல் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.




அந்த வகையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 10 கல்லூரிகள் திறக்கப்படும் என்று அறிவித்திருந்தோம் . பற்பல தடைகளை மீறி நீதிமன்றத்தின் நெடிய போராட்டத்திற்கு பிறகு நான்கு கல்லூரிகளை தமிழ்நாடு முதலமைச்சர் செயல்பாட்டிற்கு கொண்டு வந்திருக்கிறார் . அந்த நான்கு கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை 2500 ஐ தாண்டி இருக்கிறது. வறுமை கோட்டிற்கு கீழே இருக்கக்கூடிய மக்கள்தான் அதிகமாக இந்த கல்லூரியில் பயன் பெற்று வருகிறார்கள்.


நேற்றைக்கு முன்தினம் அதிமேதாவி தனமாக தமிழகத்தின் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அறிய பல சொற்களை சரித்திரத்தில் இடம்பெறுகிற அளவிற்கு கூறியிருக்கிறார். இந்த ஆட்சியில் கலைக்கல்லூரிகளை அரசின் சார்பிலே துவங்கப்பட வேண்டிய தானே என்கிறார். இந்த ஆட்சியில் கலைக் கல்லூரி அரசு சார்பில் துவங்கி இருக்கிறோம். 41 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை இந்த அரசு துவங்கி இருக்கிறது. அறநிலையத்துறையில் அறப்பணி, கல்விப் பணியையும் இந்த ஆட்சி செழுமையுடன் நடத்தி வருகிறது. உடற்பிணி நீக்கும் மருத்துவமனையை 19 கோயில்களில் கொண்டு வந்திருக்கிறோம்.


எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிகூறிய கூற்றுப்படி பார்த்தால் 1966 ஆம் ஆண்டு சென்னை மாகாண அட்வகேட் ஜெனரல் சி.பி.ராமசாமி தலைமையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு தந்த அறிக்கை 1962 ஆம் ஆண்டு கல்வி நிலையங்களை தொற்றுவிக்க வேண்டும் என்று அறிக்கை கொடுத்தது. இவர்கள் உட்கார்ந்து இடத்தில் சொல்லவில்லை. இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்த அறிக்கை அன்றைக்கு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.



சோழர் காலத்தில் கூட மிகப்பெரிய கல்விச்சாலை இருந்து 11 படப்பிரிவுகள் இடம் பெற்றிருந்ததாகவும் கல்வெட்டு கூறுகிறது. வரலாற்றில் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு கல்வி நிலையங்களும், மருத்துவ நிலையங்களும், மன்னர்களால் தோற்றுவிக்கப்பட்டிருந்தது என்பதற்கு பல சான்றுகள் இருக்கிறது.


கோயில் கட்டிடங்களை போன்ற பிரிவுகளை உள்ளடக்கி கல்லூரிகளை தொடங்கலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை சட்டமே சொல்கிறது. அந்த வகையில் தான் புதிதாக இந்த ஆட்சியில் 4 கல்லூரிகள் தொடங்கப்பட்டது. ஆந்திரா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் இதுபோன்று கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகிறது.


இந்த ஆட்சியை குறை சொல்ல வேண்டும் என்பதற்காக, அவதூறு கற்பிக்க முடியவில்லை என்பதற்காக புதியதாக சேர்ந்திருக்கின்ற சங்கிகளின் கூடாரம் மகிழ்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக பல முரணான வார்த்தைகளை பேசியிருக்கிறார் பழனிசாமி.


நேற்றைக்கு முன்தினம் பழனிசாமி கோயம்புத்தூரில் பேசும் போது அவருடைய அருகாமையில் அம்மன் அர்ஜுன் என்ற சட்டப்பேரவை உறுப்பினர் நின்று கொண்டிருந்தார். அவர் இதே சட்டமன்றத்தில் கடந்த ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் போது, அவர் மாவட்டத்திற்கு மருதமலை திருக்கோயில் சார்ந்த இடத்திற்கு ஒரு பொறியியல் கல்லூரி வேண்டும் என கோரிக்கை வைத்தார்.



எப்படி கோயில் நிதியில் இருந்து கல்விக்கூடங்களை நடத்தலாம் என்று கேட்கின்ற எடப்பாடி பழனிசாமி கேட்கிறார். அவரது தலைவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2014 அருள்மிகு பழனி ஆண்டவர் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் கூடுதல் கட்டடங்களை திறந்து வைத்திருக்கிறார். பள்ளி கல்லூரிகளுக்காக அவர்களது ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திறந்து வைக்கப்பட்டு இருக்கிறது.


கடந்த ஆட்சிக் காலங்களிலேயே இந்து சமய அறநிலையத்துறை சார்பாக எண்ணற்ற பள்ளிகள் கல்லூரிகள் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. வரலாறு தெரியாமல் இப்போது சேர்ந்திருக்கிற சங்கீகள் வைக்கின்ற கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு கோயில்கள் இந்து சமயநிலையத்துறையில் இருந்து விடுபட வேண்டும் என பாஜகவுக்கு ஊதுகோலாக இருந்து எடப்பாடி பழனிசாமி பேசியது கண்டிக்கத்தக்கது. தகுந்த பாடத்தை மக்கள் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பரிசாக அளிப்பார்கள்.


அவர் காலத்தில் அவர் இந்து சமய அறநிலையத் துறையினுடைய வருமானத்தை எடுத்து கல்லூரிக்கு கூடுதல் கட்டணங்களை திறந்து இருக்கிறார். அவருக்கு இந்த பதவி கிடைக்க காரணமாக இருந்த ஜெயலலிதா ஆட்சி காலத்தில் இந்த சமய அறநிலை துறை சார்பாக கல்லூரிகள் கட்டப்பட்டிருந்தது. அதையும் சதி செயல் என்கிறாரா?



கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் இந்த சமய அறநிலையத்துறை சார்பாக கட்டப்பட்ட கல்வி கட்டடங்கள் அனைத்தும் இந்த சமய அறநிலையத்துறை வருமானத்திலிருந்து கட்டப்பட்டது தான். அது அரசின் நிதியிலுருந்து கட்டப்பட்டது அல்ல என்பதை அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக் கொள்கிறேன்.


அறியாமையில் இருக்கிற எதிர்க்கட்சித் தலைவர் சங்கிகள் கூட்டம் எழுதிக் கொடுப்பதை அப்படியே வாசித்து வருகிறார் எனத் தெரிவித்துள்ளார்.