பாஜகவிற்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டது அதிமுக: அமைச்சர் சேகர்பாபு
Jun 23, 2025,12:38 PM IST
சென்னை: பாஜகவிற்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து விட்டது அதிமுக. அதிமுக எப்படி தன்னை அடிமைப்படுத்திக் கொள்கிறது என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணம் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
மதுரையில் நேற்று முருகன் மாநாடு இந்து முன்னணி சார்பில் நடந்தது. இந்த மாநாட்டில் அதிமுக கட்சியை சேர்ந்த முக்கிய பிமுகர்கள் கலந்து கொண்டது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, அதிமுக எப்படி தன்னை அடிமைப்படுத்திக் கொண்டுள்ளது என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணம். இந்த மாநாட்டு மேடையில் பேசியவர்கள் பெரியாரையும் அண்ணாவையும், முன்னால் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவையும் வசை பாடியவர்கள். அவர்கள் அழைக்கின்ற ஒரு மேடையில் இவர்கள் போய் அமர்கிறார்கள் என்றால் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து விட்டார்கள் என்று தான் அர்த்தம்.
திராவிடத்தே அழிப்போம் என சூளுரைக்கும் எச். ராஜா அந்த மேடையில் தான் இருக்கிறார். திராவிடம் இனி தமிழகத்தில் கோலோச்ச முடியாது என அழுத்தம் திருத்தமாக சொன்ன அண்ணாமலையும் அந்த மேடையில் தான் இருக்கிறார். அரசியல் வேறு ஆன்மீகம் வேறு என்பது எங்கள் முதல்வரின் நிலைப்பாடு. அதில் என்றைக்கும் உறுதியாக இருப்போம். நேற்று நடந்த கூட்டம் ஒருநாள் கூத்து, அது நேற்றோடு முடிந்து விட்டது.