டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் தீ.. பத்திரமாக தரையிறங்கியது.. பயணிகளுக்கு ஆபத்தில்லை

Su.tha Arivalagan
Jul 22, 2025,06:46 PM IST
டெல்லி: ஹாங்காங்கில் இருந்து டெல்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானம் தரையிறங்கியபோது திடீரென அதில் தீவிபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லை. பயணிகள், விமான ஊழியர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். தீயும் உடனடியாக அணைக்கப்பட்டு விட்டது.

ஹாங்காங்கில் இருந்து வந்த ஏர்பஸ் ஏ321 ரக விமானத்தின் APU எனப்படும் துணை மின் உற்பத்தி கருவியில் தீ பிடித்துக் கொண்டதால் இந்த அசம்பாவிதம் ஏற்பட்டது. பயணிகள் இறங்கிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்தது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் மற்றும் ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து ஏர் இந்தியா நிறுவனம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. 



APU என்பது விமானத்தில் இருக்கும் ஒரு சிறிய ஜெட் எஞ்சின் போன்றது. இது விமானம் தரையில் இருக்கும்போது மின்சாரம் மற்றும் ஏர் கண்டிஷனிங் போன்ற வசதிகளை இயக்க உதவுகிறது. அதாவது, விமான நிலையத்தின் உதவி இல்லாமல் விமானத்தை இயக்க APU உதவுகிறது. கிட்டத்தட்ட ஜெனரேட்டர் போல.

இது பொதுவாக விமானத்தின் வால் பகுதியில் இருக்கும். சில நேரங்களில் எஞ்சின் அல்லது சக்கரத்தின் அருகிலும் இருக்கலாம். APU விமானத்தின் பேட்டரியை பயன்படுத்தி ஸ்டார்ட் ஆகும். பின்னர் விமானத்தின் மின் தேவைகள் மற்றும் ஏர் கண்டிஷனிங் போன்ற வசதிகளுக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.

APUவில் தீ பிடிப்பது அல்லது பழுது ஏற்படுவது என்பது புதிதல்ல. இதற்கு முன்பும் இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. ஜூன் 2016ல் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் ஒரு வெளிநாட்டு விமானத்தின் ஏர்பஸ் ஏ330 விமானத்தில் புகை சூழ்ந்தது. APUவில் ஏற்பட்ட கசிவு காரணமாக எண்ணெய் கசிந்து புகை வந்தது.

ஜூலை 2013ல் பாரிஸ் விமான நிலையத்தில் ஏர் பிரான்ஸ் போயிங் 777-300 விமானத்தில் பயணிகள் ஏறிக்கொண்டிருந்தபோது எரிந்த வாசனை வந்தது. பின்னர் புகை சூழ்ந்தது. உடனடியாக பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.