"தனிமைப்பட்டு நிற்கிறார் CM" – காவிரி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்

Su.tha Arivalagan
Aug 01, 2026,01:39 PM IST

சென்னை: காவிரி நீர் பங்கீடு தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசின் அணுகுமுறை குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார். காவிரிப் பிரச்சினையை சட்டரீதியாக அணுகாமல், தனிப்பட்ட முறையில் தீர்த்துவிடலாம் என நினைத்ததன் விளைவாக தமிழக அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


“கேட்டைச் சாத்திட்டாங்க!” :

காவிரி நீரைப் பெறுவதற்காகத் தமிழக அரசு மேற்கொண்ட தூது முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளதை சுட்டிக்காட்டிப் பேசிய மு.க.ஸ்டாலின், "கர்நாடகம் சென்றால் காவிரியை கையோடு எடுத்து வந்து விடலாம் என தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சர் நினைத்தாரோ என்னவோ... கர்நாடகம் செல்வதற்குத் தூது அனுப்பினார். தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிடச் சொல்லி காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) உத்தரவிட்டும், 'நீங்கள் இப்போதைக்கு வரவேண்டாம்' என கேட்டைச் சாத்திவிட்டார்கள்." இதன் மூலம் தூது அனுப்பிய தமிழக அரசை அண்டை மாநிலம் மதிக்கவில்லை என்றும், காவிரி ஆணையத்தின் உத்தரவைக்கூட கர்நாடகம் கண்டுகொள்ளவில்லை என்றும் அவர் சாடியுள்ளார்.


தனி ஆவர்த்தனமும் தனிமைப்பட்ட முதலமைச்சரும் :




காவிரிப் பிரச்சினை என்பது மாநிலத்தின் வாழ்வாதாரப் பிரச்சினை என்றும், அதில் அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களையும் சட்டப் போராட்டத்தையும் ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்திய அவர், "தனி ஆவர்த்தனம் செய்ய நினைத்து, இன்று முதலமைச்சர் தனிமைப்பட்டு நிற்கிறார்."

"கர்நாடகத்துடன் சட்டரீதியாகத் தான் போராட வேண்டும் என்பதே கடந்த காலத்தில் நாம் பெற்ற படிப்பினையாகும்." "உபரிநீரை வெளியேற்றும் வடிகால் பகுதியாகத் தான் அவர்கள் தமிழ்நாட்டைப் பார்க்கிறார்கள்."


பேச்சுவார்த்தை :

தமிழகத்தில் புதிய அரசு அமைந்த பிறகு, காவிரி நீர் திறப்பு குறித்து கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் (CWMA) உத்தரவுகள் இருந்த போதிலும், கர்நாடக அரசு தண்ணீர் திறக்க மறுத்து தூதுக்குழுவின் வருகையையும் நிராகரித்துள்ளது. வரலாற்று ரீதியாக காவிரி உரிமை என்பது உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி ஆணையம் மூலமாக பெறப்பட்ட சட்டப்பூர்வ உரிமையாகும். இதன் காரணமாகவே முதல்வர் கர்நாடகா செல்வதை அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்த்து வந்தன.