ஆடி மாதம் அம்மன் மாதம்
- எம்.கே.திருப்பதி, திருப்பூர்
ஆடித் திங்கள்
ஆன்மீகத் திங்கள்!
ஆடிவரும் பக்தருக்கு
கூடி வரும் அருள்!
பாடிவரும் பக்தருக்கருள
ஓடி வருவாள் அவள்!
அலகு குத்தினால்
உலகு வெல்லலாம்
கூழ் ஊற்றினால்
ஊழ் கொல்லலாம்!
மஞ்சள் சேலைக்காரி
மக்களின் வேலைக்காரி!
வண்மைத் தன்மையை
வான் மழை போல்
வழங்குவாள் வாரி வாரி!
அவள்தான் எங்கள்
அன்னை மாரி!
சிவப்புப் பொட்டுக்காரி
சிரிப்பில் சிங்காரி!
வெகுளி கொண்டு
வீணனை வதைக்கும்
வெங்காளி!
நிலவாய் சிரித்து
நீதிமான்களின்
நெஞ்சை களவு கொள்ளுவாள்!
நெருப்பைக் கக்கி
நீசர்கள் மூச்சை
நரகில் தள்ளுவாள்!
அம்பாள்
அகிலத்தின் அன்னை
அம்பாள்
அன்னைகளின் அன்னை!
மண்டியிட்டு வேண்டினால்
மடி கனக்க கொடுப்பாள்!
தண்டனிட்டு வேண்டினாள்
தயங்காமல் கொடுப்பாள்!
மண்சோறு உண்டால்
உன்சோர்வு நீங்கும்
மண்ணில் நீ உருண்டால்
மாதா உனைத் தாங்கும்!
கண்ணில் கருத்தில்
காமாட்சியை வை
மனதில் என்றும்
மீனாட்சியை வை
விடியல் தோறும் எண்ணில்
விசாலாட்சியை வை!
கருமாரித் தாய்
கருணையைப் பெய்வாள்!
(எழுத்தாளர் எம்.கே. திருப்பதி.. திருப்பூரைச் சேர்ந்தவர். நூல் படிப்பதில் ஆர்வம். அதன் நீட்சியாக கொஞ்சம் கொஞ்சம் எழுத்துப்பணி. 98 ஆம் ஆண்டிலேயே 4 சிறுகதை, கவிதைகள், துணுக்குகள் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது. திருச்சி ஆல் இந்தியா வானொலி நிலையத்தில் கவிதை வாசித்திருக்கிறார். காவியக் கவிஞர் வாலி. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் தீவிர ரசிகன். திருவண்ணாமலை தடங்கள் பதிக்கும் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தில் நடந்த பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)