குமாரசாமியின் குலசாமி தமிழின மாக்களின் தகப்பன் சாமி!.. பெருந்தலைவர் காமராஜர்!

Su.tha Arivalagan
Jul 15, 2026,01:21 PM IST

- எம்.கே. திருப்பதி


குமாரசாமியின்

குலசாமி 

தமிழின மாக்களின் 

தகப்பன் சாமி!


கருப்புத் தங்கம் -  இந்த

காரியச் சிங்கம்!


ஏழமை இற்று விழ 

தோழமை துணை கொண்டு 

வறியோர் வாழ்வை 

வானம் ஏற்றியவர்!


நூல்நடை நுவலும் 

நுண்பொருள் கற்க 

'படிப் ' பள்ளி அனைத்தும் 

மடைப்பள்ளி ஆக்கியவர்! 




வேளாண்மை வயித்துக்கு 

தொழிற்சாலை பிழைப்புக்கு என

பேதம் பிரித்து 

வேதம் போலொரு

விவரணை செய்தவர்!


நாட்டு நலமே

கூட்டு நலமென 

தன்னலமில்லாத தன் திறத்தை 

தரணி மழையாய் பெய்தவர்!


அவர்

வேளாண்மைக்கு உதவும்

அணைகளின் அரசன்

ஆகவே ஆகிறார் 

தினைகளின் அரசன்!  


கர்மவீரர் தன் 

தர்ம வாழ்வுக்கு

இல்லக் கிழத்தி 

இழைப்பாள் இடரென 

உள்ளக் கிழத்தியை 

உதறி வாழ்ந்தவர்!


பெருமகன் பீஷ்மன் போல் 

பிரதிக்ஞையில் ஆழ்ந்தவர்!


செயல் வீரன் 

சிந்தையில் ஈரன் 

அப்பனிடம்

மண விஷயத்தில்

மன்றாடிப் பார்த்து 

மண்டியிட்டான் மாறன்!


மக்களின் மன்னன் 

மாண்பில் பொன்னன்!

தேசம் காத்த தென்னன் 

எப்போதும் ஏழ்மையை

எண்ணிய எண்ணன்!


சக்கரவர்த்திகளை

சுட்டு விரலால் சுட்டிய 

சக்கரவர்த்தி!


இளமைக்கு முதுமை 

வழிவிட வேண்டுமென 

வழிமொழிந்து 

தலைமைப் பணி துறந்த 

மெழுகுவர்த்தி!


கட்டியது கந்தை 

காட்டியது விந்தை!


உடுத்திய ஆடைபோல் 

உள்ளங்கவர் ரூபன்!


செயல் முடித்து - சீலன்

செல்லும் தருவாயில்

மீதமிருந்தவை

செல்லுண்ட குடைபோல்  

சில பல உடைகள்!


அவைதாம் 

அவர் நமக்கு

விளக்காமல் 

விதைத்த விடைகள்!


(எழுத்தாளர் எம்.கே. திருப்பதி.. திருப்பூரைச் சேர்ந்தவர். நூல் படிப்பதில் ஆர்வம். அதன் நீட்சியாக கொஞ்சம் கொஞ்சம் எழுத்துப்பணி.  98 ஆம் ஆண்டிலேயே 4 சிறுகதை, கவிதைகள், துணுக்குகள் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது. திருச்சி ஆல் இந்தியா வானொலி நிலையத்தில் கவிதை வாசித்திருக்கிறார். காவியக் கவிஞர் வாலி. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் தீவிர ரசிகன்)