மூவேந்தர் வீரமும் முண்டாசு கவிக்குள்!
- உணர்வேற்றுக் கவிஞர் எம்.கே.திருப்பதி, திருப்பூர்
புலிக்கொடி வீரம்
புத்தியில் இருக்கும்
மீன்கொடி ஆற்றல்
மீசையில் இருக்கும்!
வில் கொடி வித்தை
சொல்லில் இருக்கும்
மூவேந்தர் திறமும்
நவேந்திக் கிடக்கும்!
வாளேந்தும் நாளில்
தாளேந்தி நின்றான்
வில்லேந்தாது
சொல்லேந்தி வந்தான்!
சாதிய கொடுமைக்கு
சமாதி வைத்தான்
போதிய நல்லுரை
பொதுவில் வைத்தான்!
உடன் கட்டைக்கு
உடன்பட மறுத்தான்
உடன் படாதோரை
உரையில் வறுத்தான்!
குழந்தை மணத்தை
குழியில் தள்ள
அலகை போலவனும்
ஆர்ப்பரித்து தள்ளினான்!
துள்ளித் திரியும்
தூய நெஞ்சை
பள்ளியில் தள்ளும்
பாவிகளை எள்ளினான்!
பாரதி
நூலாடை அணிந்த
நூலகம்!
நாலடி நடக்கும்
நூலடி!
சமூக அவலங்களின்
சாட்டை அவன்!
சமத்துவ ஆடை நெய்யும்
ராட்டை அவன்!
கீழ் மகன்களுக்கு
கேட்டை அவன்!
நூல் மகன்களுக்கு - அறிவு
கோட்டை அவன்!
புலவன் பாரதி
அன்னை சரஸ்வதியின்
ஆண் வடிவம்!
ஆண்மை கேண்மை
ஆகியவற்றின்
அசல் வடிவம்!
முத்தமிழ் போல்
மூவேந்து போல்
மூழ்கா வரம்!
(எழுத்தாளர் எம்.கே. திருப்பதி.. திருப்பூரைச் சேர்ந்தவர். நூல் படிப்பதில் ஆர்வம். அதன் நீட்சியாக கொஞ்சம் கொஞ்சம் எழுத்துப்பணி. 98 ஆம் ஆண்டிலேயே 4 சிறுகதை, கவிதைகள், துணுக்குகள் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது. திருச்சி ஆல் இந்தியா வானொலி நிலையத்தில் கவிதை வாசித்திருக்கிறார். காவியக் கவிஞர் வாலி. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் தீவிர ரசிகன்)