மனதிற்கினியள் ஆதாரத் தாரகை!

Su.tha Arivalagan
Mar 08, 2026,07:14 PM IST
- எம்.கே.திருப்பதி, திருப்பூர்

மாநில மடந்தைகள்
வான்நிலா உயரங்கள்
ஊண்நில வயல்களின்  
தேன்சுவை செல்வங்கள் 

இல்தனில் என்றும் 
நல்வரம் நல்கும்
பல்திற பாவைகள் - அந்நிறை 
கல்குவோம் நாமும் 

குடிஉயரக் கொடி பிடிக்கும்  
கொடி இடையள் 
மடியதனில் மகவு சாய்க்கும் 
முடி நெடியள் 

வாக்கப்பட்ட வீடு
காக்கப்பட கவனமாய் 
பொல்லாங்கு செய்தாலும் 
நல்லாங்கு செய்திடுவாள் 



அம்மி மிதித்து 
பம்மி வந்த இல்லம் 
கும்மி அடித்தாலும் 
விம்மாது விரும்பிடுவாள் 

பணியாற்றும்போது
பிணியாற்றும் கூட்டம்...!
துணிந்தவள் சீறினால் - எடுப்பர் 
துணியில்லா ஓட்டம் 

தெருவில் செல்கையில்- அரக்க
உருவில் ஒருவன் உருட்டுவான்    
பள்ளி செல்கையில் - பலதும்
சொல்லி சொல்லி மிரட்டுவான்

மனிதா! மங்கை என்பவள் 
மங்கள விளக்கு!
மானுடா! உன்
மயக்கம் விலக்கு!

அவள்
மடைகளை உடைத்து
விடைகளை விண்டாள் 
முடைகளை விலக்கி 
நடைகளை கண்டாள்!

வெயிலின் அருமை
நிழலில் தெரியும்!  - இந்த
மயிலின் அருமை - அவள்
மறைந்தால் புரியும்!

இவள் சாதித்து விட்டாள் 
இமயத் தளவு 
இன்னுமா மயக்கம்?
இனிக்கப் பழகு!

வஞ்சினத்தை வாழ்த்த 
நெஞ்சினத்தை ஊக்கு!
வெஞ்சினத்தை கொட்டாமல்
கஞ்சத்தனம் போக்கு!

(எழுத்தாளர் எம்.கே. திருப்பதி.. திருப்பூரைச் சேர்ந்தவர். நூல் படிப்பதில் ஆர்வம். அதன் நீட்சியாக கொஞ்சம் கொஞ்சம் எழுத்துப்பணி.  98 ஆம் ஆண்டிலேயே 4 சிறுகதை, கவிதைகள், துணுக்குகள் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது. திருச்சி ஆல் இந்தியா வானொலி நிலையத்தில் கவிதை வாசித்திருக்கிறார். காவியக் கவிஞர் வாலி. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் தீவிர ரசிகன். திருவண்ணாமலை தடங்கள் பதிக்கும் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தில் நடந்த பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)