சிவபெருமானின் சொந்த ஊர் இதுதாங்க.. சென்னை டு ராமேஸ்வரம் ஒரு ஆன்மீகப் பயணம் (பகுதி 4)
- எம்.எல்.பிரபா
உத்தரகோசமங்கை சென்று வேனில் இருந்து இறங்கியவுடன் கோபுர தரிசனம் செய்தோம். அந்த பிரம்மாண்டமான கோபுரம் பலவித வண்ணங்களுடன் பார்ப்பதற்கே அற்புதமாயும், அழகாயும், பிரமிப்பாகும் தோன்றியது.
கோபுர வாயிலில் நுழையும் போது அப்பப்பா!! என்ன ஒரு சில்லென்ற காற்று வீசியது. மனதிற்கு மிகவும் இதமாக இருந்தது. மிகவும் பழமையான கோயில் . இங்குள்ள சுவாமியின் பெயர் "மங்கள நாதர்." அம்பாள் பெயர் "மங்களேஸ்வரி" என்று அழைக்கப்படுகிறது. மேலும் இந்த ஊர் சிவபெருமானுக்கு சொந்த ஊராக கருதப்படுகிறது.
அதனால் "தட்சிண கைலாயம்" என்றும் அழைக்கப்படுகிறது. இந்த தலத்தின் இன்னொரு சிறப்பு மாணிக்கவாசகரால் பாடல் பெற்ற ஸ்தலமாகும்.
சிவபெருமான் பார்வதி தேவிக்கு வேத ஆகமங்களின் ரகசியங்களை உபதேசம் செய்ததால் இத்தலத்திற்கு "உத்தர கோசமங்கை" என பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. 'உத்தரம் ' என்றால் 'உபதேசம்' கோசம் என்றால் 'ரகசியம்' மங்கை என்றால் 'பார்வதி தேவி' என்று தல வரலாற்றில் கூறப்படுகிறது.
உலகத்தில் வேறு எங்கும் காண முடியாத 6அடி உயரத்தில் மரகதத்தால் ஆன பச்சை நிற நடராஜர் இங்கு உள்ளது. இந்த நடராஜர் ஆண்டு முழுவதும் சந்தன காப்பு சாத்திக் கொண்டே இருப்பார். மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனத்தி ன் போது அன்று ஒரு நாள் மட்டும் சந்தன காப்பு களையப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இந்த தரிசனத்தை காண மக்கள் பல்வேறு இடங்களில் இருந்து கூட்டம் கூட்டமாக வருகிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்த தரிசனத்தை கண்டவர்கள் பிறவிப்பயனை அடைவர் என்பது ஐதீகம்.
இங்கு சகஸ்ர லிங்கம் என்று தனி சன்னதி உள்ளது .அக்னி தீர்த்தம் என்று ஒரு குளம் உள்ளது. அந்த குளத்தில் இருந்து தீப்பிழம்பாக சிவபெருமான் எழுந்து 999 முனி வர்களுடன் மத்தியில் தானும் சேர்ந்து சகஸ்ர லிங்கமாக இங்கே காட்சியளிக்கிறார். மாணிக்கவாசகருக்கும் காட்சி அளித்து அவருக்கு உபதேசம் செய்ததாய் சொல்லப்படுகிறது.
அக்னி தீர்த்த குளக்கரையில் மாணிக்கவாசகருக்கு தனி சன்னதி உள்ளது. பல்லாயிரம் ஆண்டுகளாய் இலந்தை மரம் ஒன்று உள்ளது. இன்றும் அந்த மரம் காய்க்கிறது, பழுக்கிறது .இந்த இலந்தை மரத்தின் அடியில் பாதாளத்தில் இருந்து சுயம்புவாக லிங்கம் தோன்றி சிவபெருமான் பிரம்மனுக்கு காட்சி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
அம்பாள் மங்களேஸ்வரிக்கு தனியாக ஒரு சன்னதி உள்ளது. மிகப் பெரிய கோபுரம், மிகப்பெரிய பிரகாரம் உள்ளது. இது தவிர முருகன், பிள்ளையார், யோக தக்ஷிணாமூர்த்தி போன்ற சுவாமிகளுக்கும் தனியாக சன்னதி அமைந்துள்ளது. இத்தலம் சிவஸ்தலங்களில் மிகவும் முக்கியமான இடமாக கருதப்படுகிறது. இந்த தலத்தில் தரிசனத்தை முடித்துக் கொண்டு அடுத்த கோயிலுக்கு செல்ல தயாரானோம்.
பயணம் தொடரும்
(எம் .எல்.பிரபா, சென்னை ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை. தமிழ்நாடு நியூஸ் பேப்பர், பேப்பர் பாய், பன்முகம், மலர்வனம், விருட்சம், நான் போன்ற மின் இதழ்களில் சிறுகதைகள், கட்டுரைகள் போன்றவைகளும், தமிழ்நாடு நியூஸ் பேப்பரில் 'மாயக்கண்ணன் லீலை' என்ற தொடரும் எழுதியுள்ளார்)