Cooking Tips: பிரண்டை துவையல்!

Su.tha Arivalagan
Sep 30, 2026,01:28 PM IST

- எம்.எல்.பிரபா


"பெத்த வயித்துக்கு பிரண்டையத்தான் வச்சி கட்டிக்கணும்" என்று ஒரு பழமொழி கிராமங்களில் கூறுவது உண்டு. ஏனென்றால் பிரண்டை வயிற்றுக்கு நல்லது. மருத்துவ குணம் கொண்ட பிரண்டையை வைத்து துவையல் எளிய முறையில் எப்படி செய்வோம் என்று பார்ப்போம்.


தேவையான பொருள்கள்:


பிஞ்சு பிரண்டை ஒரு ஜான் அளவிற்கு 5 துண்டுகள், காய்ந்த மிளகாய் வற்றல் 4, கடலைப்பருப்பு மூன்று டீஸ்பூன், உளுத்தம் பருப்பு மூன்று டீஸ்பூன், புளி, (எலுமிச்சை பழ அளவு) நல்லெண்ணெய் 3 டீஸ்பூன், தேங்காய் துருவல் இரண்டு டீஸ்பூன், தேவையான அளவு உப்பு ,பொடித்த வெல்லம் 2 டீஸ்பூன், சிறிதளவு பெருங்காயம், சிறிது கருவேப்பிலை.


செய்முறை:




முதலில் பிரண்டையை நன்றாக தண்ணீரில் கழுவ வேண்டும். பிறகு பிரண்டையின் ஓரங்களில் இருக்கும் முள் மற்றும் நரம்புகளை நீக்க வேண்டும். பிறகு அதை நல்லெண்ணெய் ஊற்றி நன்றாக வதக்கவும். அதை தனியாக ஒரு தட்டில் மாற்றிக் கொள்ளவும்.


மீண்டும் வாணலியில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை, மிளகாய் வற்றல், புளி போட்டு வறுக்கவும். கடைசியில் வெல்லம், பெருங்காயம் சேர்த்து வறுத்து இறக்கி வைக்கவும். பிரண்டையுடன் எல்லா பொருள்களையும் சேர்த்து மிக்ஸியில் போடவும். 


தண்ணீர் சேர்த்து அரைக்கவும். தேவையான அளவு உப்பை சேர்க்கவும். கெட்டியான விழுதாக அரைக்கவும். கடைசியாக தேங்காய் துருவலையும் போட்டு அரைக்கவும். வேறு பாத்திரத்தில் மாற்றவும். பிரண்டை துவையல் ரெடி. சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் அடடா!! சுவை அமோகம்.. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.


(குறிப்பு )


பிரண்டையில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் அதிகம் உள்ளதால் எலும்புகளை வலுப்படுத்தவும், பசியை தூண்டவும், அஜீரணம் மற்றும் செரிமான பிரச்சனை அகற்றவும், மூட்டு வலியை குறைக்கவும் உதவும். மிகச்சிறந்த பாரம்பரிய மருத்துவ குணம் கொண்ட தாவரம்.


யாரெல்லாம் சாப்பிடக்கூடாது:


கர்ப்பிணிகள் மற்றும் வயிற்றில் புண் அல்லது அல்சர் உள்ளவர்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.


(எம் .எல்.பிரபா, சென்னை ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை. தமிழ்நாடு நியூஸ் பேப்பர், பேப்பர் பாய், பன்முகம், மலர்வனம், விருட்சம், நான் போன்ற மின் இதழ்களில் சிறுகதைகள், கட்டுரைகள் போன்றவைகளும், தமிழ்நாடு நியூஸ் பேப்பரில் 'மாயக்கண்ணன் லீலை' என்ற தொடரும் எழுதியுள்ளார்)