Tasmac: வந்த உடனேயே ஆக்ஷனில் இறங்கிட்டீங்களே.. முதல்வர் விஜய்க்கு கமல்ஹாசன் வாழ்த்து!
சென்னை: ஆட்சிப் பொறுப்புக்கு வந்த உடனேயே டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கியதற்காக முதல்வர் சி. ஜோசப் விஜய்க்கு, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் எம்.பியுமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் 2023ம் ஆண்டு 500க்கும் மேற்பட்ட மதுக் கடைகளை மூடி உத்தரவிடப்பட்டது. அதன் பிறகு மதுக் கடைகள் மூடல் நடைபெறாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் தவெக ஆட்சிக்கு வந்த நிலையில் முதல்வராகப் பதவியேற்ற சி. ஜோசப் விஜய் அதிரடியாக முதல் முக்கிய நடவடிக்கையாக டாஸ்மாக் கடைகள் 717ஐ மூட உத்தரவிட்டுள்ளார். இன்னும் 2 வாரங்களில் இந்தக் கடைகள் மூடப்பட்டு விடும்.
இந்த நடவடிக்கைக்கு வரவேற்பும் பாராட்டும் குவிந்து வருகிறது. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தியில், வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகேயுள்ள மதுபான விற்பனைக் கடைகளை அகற்ற வேண்டுமென்பது தமிழ்க் குடும்பங்களின் எதிர்பார்ப்பாக இருந்த நிலையில், இந்த நடவடிக்கையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய்
அவர்கள் பதவிக்கு வந்தவுடனேயே எடுத்திருக்கிறார்.
மதுபானம் விற்பனை ஓர் அரசாங்கத்தின் பணியாக என்றுமே இருக்கக்கூடாது; மதுப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் பொறுப்பைத்தான் அரசு கைக்கொள்ள வேண்டும். இந்த நிலையை நோக்கி தமிழ்நாடு அரசு நகர வேண்டும்.
இன்று 717 மதுக்கடைகள் மூடல் என்று தொடங்கியிருக்கிறது. இந்த எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட வேண்டும். இந்த நடவடிக்கை தொடரப்படவேண்டும் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.