தவெக அரசில் சேர முடியாமல் போச்சே.. தனிச் சின்னத்தில் போட்டியிடாததால் வருந்தும் கட்சிகள்?

Su.tha Arivalagan
May 23, 2026,10:39 AM IST

சென்னை: திமுக கூட்டணி கிட்டத்தட்ட கரையை ஆரம்பித்து விட்டது. ஏற்கனவே விசிக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகள் தவெக அரசில் இணைந்து விட்ட நிலையில் மேலும் சில கட்சிகள் தவெக கூட்டணி அரசில் சேர முடியாமல் போய் விட்டதே என்ற வருத்தத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


தமிழ்நாட்டு அரசியலில் விஜய் என்ற ஒற்றை மனிதரால் ஏகப்பட்ட பிரளயங்கள் ஒரே தேர்தலில் ஏற்பட்டு விட்டன. வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு திராவிடப் பெரும் கட்சிகளாக பார்க்கப்பட்டு வந்த திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டுமே எதிர்க்கட்சி வரிசையில் முதல் முறையாக அமரும் நிலை ஏற்பட்டு விட்டது.


எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கூட பெற முடியாத நிலைக்கு மு.க.ஸ்டாலின் தள்ளப்பட்டு விட்டார். கொளத்தூர் தொகுதியில் அவர் அதிர்ச்சித் தோல்வியைச் சந்தித்ததை இன்னும் கூட திமுகவினரால் ஜீரணிக்க முடியவில்லை. 




இதுபோதாதென்று திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் மின்னல் வேகத்தில் பிரிந்து போய் விட்டது. பின்னாடியே விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகியவையும் வந்து சேர்ந்தன. ஆரம்பத்தில் திமுகவின் அனுமதியுடன்தான் இவர்கள் வந்ததாக கூறப்பட்டது. இவர்களும் திமுக கூட்டணியில் தொடர்வதாகவும் தெரிவித்திருந்தனர்.


ஆனால் தற்போது இரு கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தவிர மற்ற  3 கட்சிகளும் விஜய் அமைச்சரவையில் இணைந்து விட்டன. இதை கடுமையாக விமர்சித்து, அதாவது ஆபாசமாக விமர்சித்து நேற்று முன்னாள் அமைச்சர் ஆ ராசா போட்ட டிவீட் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது. முதிர்ச்சியாக பேசக் கூடியவரானா ராசாவா இப்படி போட்டார் என்று அனைவருமே அதிர்ச்சி அடைந்தனர். பிறகு தனது டிவீட்டை நீக்கி விட்டார் ராசா.


ராசாவின் டிவீட் காரணமாக விசிக இனி ஒரு போதும் திமுக கூட்டணியில் நீடிக்க வாய்ப்பில்லை என்ற நிலை ஏற்பட்டு விட்டது. காலப் போக்கில் கம்யூனிஸ்ட் கட்சிகளும் தவெக கூட்டணியில் முறையாக இணைந்து விடும் சூழல் ஏற்பட்டுள்ளது.


இந்த நிலையில் திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகள் அடடா நாமளும் தவெக கூட்டணி அரசில் சேர முடியாமல் போய் விட்டதே என்ற ஏக்கத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக (2), கொங்கு மக்கள் தேசியக் கட்சி (1), மனிதநேய மக்கள் கட்சி (1), மனித நேய ஜனநாயகக் கட்சி (1)  ஆகியோர் போட்டியிட்டனர். இவர்கள் தவிர கருணாஸ் கட்சிக்கு ஒரு சீட்டும் தரப்பட்டது. ஆனால் அவர் தோற்றுப் போய் விட்டார்.


இதில் இனிமேல் வேறு கட்சியின் சின்னத்தில் நாங்கள் போட்டியிட மாட்டோம் என்று ஜவாஹிருல்லா தலைமையிலான மனித நேய மக்கள் கட்சி திடீரென தீர்மானம் போட்டு அறிவித்துள்ளது. இது திமுக தரப்பை அதிர வைத்துள்ளது. மேலும் தவெக அரசைப் புகழ்ந்தும் தீர்மானங்களைப் போட்டுள்ளது மனித நேய மக்கள் கட்சி. இதை வைத்துப் பார்க்கும்போது தவெக அரசில் சேர முடியாமல் போய் விட்டதே என்ற ஏக்கத்தில் அக்கட்சி இருப்பதாக கூறப்படுகிறது.


இதே மன நிலையில் வேறு சில கட்சிகளும் இருப்பதாக சொல்லப்படுகிறது. மதிமுகவைப் பொறுத்தவரை அது தவெக அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருப்பதாக சொல்கிறார்கள். வைகோவின் வீட்டுக்கு முதல்வர் விஜய் சென்றபோது மகா உற்சாகமாக வைகோ, விஜய்யை வரவேற்றதை மறக்க முடியாது. அவ்வளவு சந்தோஷமாக சமீப காலத்தில் அவரை எங்குமே யாரும் பார்க்கவில்லை. அத்தனை உற்சாகமாக விஜய்யை வரவேற்று மகிழ்ந்தார் வைகோ. மேலும் விஜய்யை வெகுவாகப் புகழ்ந்தும் பேசினார். வைகோவுக்கு, விஜய் மீதும் தவெக மீதும் அதிக பாசம் கூடி வருவதாக கருதப்படுகிறது. ஆனால் மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றதால் எந்த முடிவையும் எடுக்க முடியாத நிலைக்கு மதிமுக தள்ளப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. 


இனி வரும் காலத்தில் எந்த சின்னக் கட்சியும் பிற கட்சிகளின் சின்னத்தில் போட்டியிட முன்வராது என்ற சூழல் ஏற்பட்டு விட்டது. மேலும் இனிமேல் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியே கண்டிப்பாக ஏற்படும் என்ற நிலையை விஜய் உருவாக்கி விட்டதால் ஒவ்வொரு கட்சியும் இனி தனி சின்னத்திலேயே போட்டியிட விரும்பும்.


விஜய் இன்னும் என்னவெல்லாம் பண்ணப் போறாரோ!