Monday Motivation: அலட்சியம் தவிர்ப்போம்!! ஆனந்தமாய் வாழ்வோம்!!
உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் மிக மிக விழிப்போடு (அலர்ட்டாக) வாழ்கின்றன. பறவைகளையும் பூனை, நாய் போன்ற சின்னச் சின்ன உயிரிகளின் செயல்பாடுகளைக் கொஞ்சமே கொஞ்சம் உற்று நோக்கி
கவனித்தோம் என்றால், நன்கு தெரியும்.
அவையெல்லாம் எப்போதும் தயார்நிலையில் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதில் முன்னிலையில் இருக்கின்றன. ஆனால் மனிதர்களாகிய நாமோ...? மிகப்பெரிய கேள்விக்குறிதான் இந்த விடயத்தில்.
அலட்சியம்.. செய்யும் செயல்கள் அனைத்திலும் அலட்சியம்!
சிறு குழந்தைகள்கூட அலட்சிய மனோபாவத்தை வெகு எளிதாகக் கற்றுக் கொள்கிறார்கள். ஒன்றுமே இல்லை... வீட்டை விட்டு வெளியே செல்கிறோம். சாலைவிதிகளை முறையாகக் கடைப்பிடிக்கிறவர்களின் எண்ணிக்கை
எத்தனை?
இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களில் எத்தனை பேர் முறையாகத் தலைக்கவசம் அணிந்து வண்டி ஓட்டுகின்றனர். போக்குவரத்துக் காவலர் நிற்பார். அபராதம் விதிப்பார் என்ற கட்டாயத்தால் தலைக்கவசம் அணிபவர்கள்தான் அதிகம்.
தன் மீதும் தன் குடும்பத்தின் மீதும் அக்கறை உள்ளவர்கள் தன்னியல்பாகவே விதிகளைச் சரியாகப் பின்பற்றுவார்கள்.
பொதுவெளியையும் நீர்நிலைகளையும் குப்பை கொட்டும் இடமாக மாற்றி வைத்திருக்கிறோம். நம் வீட்டுக் குப்பை கூளங்களை ஒன்று திரட்டி மூட்டைகட்டி, அதற்கென உரிய இடத்தைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் வீசியெறிகின்றோம்.
பிறகு சிங்கப்பூர் போன்ற நாடுகளோடு ஒப்பிட்டு, 'நம் நாடு அப்படி இல்லையே..! சுத்தத்தில் சுகாதாரத்தில்' என்று விமர்சிப்பதும் நாம்தான். நம் செயலை நாமே கவனிப்பது இல்லை. வாய், தூய்மை பற்றி பிரச்சாரம்
செய்து கொண்டே... கைகள் - குப்பைகளை வீசியெறிந்து கொண்டிருக்கும் முரண்கள் அன்றாடம் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.
நம்மின் செயல்முரணை நாமே உணர்வது இல்லை என்பதுதான் சோகத்திலும் சோகம். நாம் தூக்கியெறியும் அலட்சியக் குப்பைகளால் எத்தனை ஜீவராசிகள் தன் உணவென எண்ணி கண்டது கழியதையும் உண்டு உயிரிழக்கின்றன... அதைப் பற்றியெல்லாம் அக்கறை கொள்ள நமக்கு ஏது அவகாசம்?!
வீதிகள்தோறும் துரித உணவகங்கள், சுவை நிறை தின்பண்டக் கடைகள் நின்று கொண்டே உண்பதும் நடந்து கொண்டே குப்பைகளை அலட்சியமாக வீதிகளில் விதைப்பதும் என துரிதகதியில் அசுத்தப்படுத்துகிறோம்.
தெய்வீக சூழல் நிறைந்த கோயிலுக்குச் சென்றால்கூட அங்கு தரும் பிரசாதங்களைச் சாப்பிட்டுவிட்டு தொன்னைகளை ஆங்காங்கே போட்டு வருகிறோம்.
ஏன் இந்த அலட்சியம்...?
நம் வீடாய் இருந்தால் இப்படிச் செய்வோமா?
வீட்டிற்குள் சென்று பார்த்தால்தானே தெரியும்... என்கிறீர்களா?? அதுவும் சரிதான்..!
பலரது வீடுகளில் வீட்டிற்கு யாராவது உறவினர், நண்பர்கள் என்று வருகிறார்கள் என்று தெரிந்தால் மட்டுமே தூசி தும்பு இல்லாமல் பளிச்சென்று துலங்கும்.
எங்கும் அலட்சியம் எதிலும் அலட்சியம் என்ற நிலை மாற ஒவ்வொரு தனிமனிதர்களும் விழிப்போடு செயல்படுதல் அவசியம்.
"ஓர் ஆணி இல்லாததால் லாடம் போயிற்று; ஒரு லாடம் இல்லாததால் குதிரை போயிற்று; குதிரை இல்லாததால் குதிரை வீரன் எதிரியிடம் பிடிபட்டான். ஓர் ஆணி செய்த வேலை. எனவே சிறு செயல்களிலும்
விழிப்போடு இருங்கள்" - ரிச்சர்டு சாண்டர்ஸ் என்ற அறிஞர் கூறுகிறார்.
பெரும்பாலான வீடுகளில் உள்ள தாய்மார்கள் தன் வீட்டையும் தன் வீட்டு மனிதர்களையும் அன்போடும் அக்கறையோடும் கவனித்துக் கொள்ளும் அளவிற்கு தன் உடல்நலத்தைக் கண்டு கொள்வது இல்லை.
வீட்டில் நால்வர் இருந்தால் நான்கு வகைச் சமையல்! எல்லாவற்றிலும் மிஞ்சும் மிச்சம்மீதியே அன்னையவளின் ஆகாரம். வீணாய்ப்போய்விடுமே என்று எஞ்சியவற்றை எல்லாம் வழித்தெடுத்து வாயிலிட்டு தன் வயிற்றை
நிரம்பும் அவளை உடன் வாழும் ஜீவன்கள் என்றாவது கண்ணெடுத்தும் பார்ப்பதுண்டா??? நீ சாப்பிட்டாயா?? என்று கேட்பவர் உண்டா? அலட்சியம். சகமனுஷியை மதிப்பதும் இல்லை; ஆனால் அவளின் சேவையை மட்டும் தாராளமாய்
ஏற்றுக் கொண்டு சுகவாசியாய் வாழ்வது எந்தவகையில் நியாயமோ??
பள்ளி செல்லும் பாலகரும் பரீட்சை நெருங்கும் வரை விளையாட்டு வேண்டாத வீண் பொழுதுபோக்கு என இருந்துவிட்டு... நாளை படிக்கலாம்...பிறகு பார்த்துக் கொள்ளலாம்... என்று அந்தந்த சமயத்திற்குத் தக்க
பெற்றோரா... ஆசிரியரா... என்று ஆளுக்குத் தக்கன என்று ஒரு தயார்நிலை பதிலும் கோபமும் என்று நேரத்தின் அருமை உணராத அலட்சியம்!
இழந்தபின் உணர்ந்து உபயோகம் இல்லை. எனவே சிறு செயலிலும் விழிப்போடு இருக்க முயல்வோம்! ஒவ்வொரு செயல்களிலும் விழிப்போடு செயல்படுவோம்! அலட்சியம் தவிர்ப்போம்! பிறர் மீதான அன்பையும் அக்கறையையும் தாராளமாய் வழங்கி இன்பமாய் வாழ்ந்திடுவோம்!
(முனைவர் தி. தங்கலட்சுமி.. அண்ணாமலையாரின் திருவடி நிழலில் தஞ்சம் புகுந்து, திருவண்ணாமலையின் தெய்வீக மலை தரிசனத்தின் அருட்பார்வையின் கீழ் வதிந்து சுவாசிக்கும் ஜீவன்! பேரறிவின் கீழ் அடிபணிந்து வாழும் சிற்றறிவு ஜீவி! அன்னை தந்தையர், உடன் பிறந்தாரோடு ஆனந்தமாக இன்பம் களிக்கும் பிறவி! இணையவழியில் ஈடுயிணையில்லா தொன்மைத் தமிழ்மொழியின் நயம் எடுத்தியம்பும் ஆசிரியை! தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பவர்).