Monday Motivation: கவனமிலா கவன ஈர்ப்புகள்!

Su.tha Arivalagan
Jun 29, 2026,10:33 AM IST

- முனைவர் தி. தங்கலட்சுமி


அன்றாட வாழ்வில் போகிற போக்கில்

அடுத்தவர் மனங்களை உணர்வினை 

உரசியும் உரசாமலும் சிலபல கவன ஈர்ப்புகள்!


சாலையைக் கடக்கத் துடிக்கும் பாதசாரிக்குப் 

பறந்து செல்லும் வாகன நெரிசலிலும் 

சிறு புன்னகையுடன்கூடிய சிறு பரிசளிப்பாய்

'செல்லுங்கள்!' என வழிவிட்டுக் 

காத்திருக்கும் பொறுமைத் தருணத்தில்! 


முண்டியடித்து இடம்பிடிக்கத் துடிக்கும் 

நெரிசல் நிறை பேருந்துப் பயணத்தில் 

இறங்க வேண்டிய நிறுத்தம் நெருங்குந்தருவாயில் 

நீண்ட காத்திருப்பிற்குப் பின்னாகக் கிடைத்த

இருக்கையை அடுத்த பயணிக்காய் விட்டுக்கொடுத்து

'பரவாயில்லை! நீங்கள் அமருங்கள்' எனும்

மனமகிழ் தருணத்தில்! 




கடைக்காரர் தந்த அதீத மீதத்தைச்

சரியாக மீண்டும் திருப்பித்தரும் சில்லரையில்

ஒளிரும் நாணயத் தருணத்தில்!


கல்தடுக்கிக் கால்தடுமாறி விழுந்தவரைக் கண்டு

கைகொட்டிச் சிரியாது கைப்படம் எடுத்து ரசியாது

கைகொடுத்துக் கைத்தாங்கலாய்த் தூக்கிவிடும்

சிற்றுதவியில் நிறைபெருங் கருணைத் தருணத்தில்! 


சரியான சில்லரைக்காய் நச்சரிக்காது

தன் லாபத்தில் விட்டுக்கொடுக்கும் 

சிறுவியாபாரியின் சிறுசெயலில் வெளிப்படும் 

பெருந்தன்மைத் தருணத்தில்! 


பையில் பணமில்லா மனம் முழுதும் ரணம் சுமந்த

வயிற்றின் கிள்ளலான பசிவேளையில் உச்சிவெயிற்போதில்

தற்செயலாய் எதிர்கொண்ட பால்ய சிநேகிதன்...

 

வாஞ்சையோடு கட்டியணைத்து தோள்மீது கரமிட்டு

பழங்கதையோடு புதுக்கதையும் நா தித்திக்க

வடையோடு மசாலா தேநீர் பகிர்ந்துண்ட 

நட்பின் பெருமழைத் தருணத்தில்!   


எப்போதாவது நிகழும் மனமகிழ் தருணமது;

குடும்பமாய்ச் சென்று உணவகத்தில் உண்ணும் வைபவம்...!

 

அச்சிறுவனுக்குத் தெரியும் தன் தந்தையின் நிதிநிலை!

ஆகவே, தனதாசையின் எல்லையைச் சுருக்கி

விலைப்பட்டியலின் நீள அகலமாராய்ந்த தெரிவோடே 

காத்திருந்து ரசித்துச் சுவைப்பான்...!


சர்வநிச்சயமாய்த் தெரியும்.. தன்குட்டித் தங்கையின் 

இலையில் உள்ளவை எப்படியும் தன் வயிற்றையே வந்தடையுமென்று...!


தானுண்ட தாய்ப்பாலின் எச்சில் மிச்சம் உண்டு வளர்ந்த

தன்தங்கை உண்ட எச்சில் மிச்சத்தில் தனையனின் 

உள்ளம் நிறைந்து பூரித்துச் சுவைக்கும்...! 


'சிறுகை அளாவிய கூழின்' தனிருசிதனை 

புசித்திடும் பாசத் தருணத்தில்! 


தன்சேமிப்பெல்லாம் கரைந்து இனி செலவிட ஒன்றுமில்லா

நெருக்கடி சூழலில் எதிர்பாராது தன்னை எதிர்கொண்ட 

நோயிலிருந்து விடுபட இனியும் வைத்தியத்தைத் தொடர்வதா?

அல்லது விதியை நொந்துகொண்டு சிகிச்சையைக் கைவிடுவதா?


மனத்தடுமாற்ற வேளையில் பணத்தட்டுப்பாட்டைத் தீர்த்து

கைகொடுக்க ஓடோடி வந்த உறவையும் நட்பையும் 

காலமெலாம் எண்ணி எண்ணி நெகிழும் நேசத் தருணத்தில்!


குலதெய்வ வழிபாட்டின்போது கிடாவெட்டுக் கறிவிருந்தில் 

முட்டிக்கொண்டும்  மோதிக்கொண்டும் 

கட்டியுருண்ட அங்காளிப் பங்காளிகள்...

முகந்திருப்பி உறவுமுறித்த அண்ணன் தம்பிகள்...


தனது ஆத்தாவின் இறுதிச்சடங்கில் கண்ணீர்மல்க

கட்டியணைத்துக் கொண்டு ஒருவருக்கொருவர் 

ஆறுதலும் தேறுதலும் வழங்கிடும் அன்புத் தருணத்தில்! 


வாழ்வின் பல தருணங்களில் விட்டுக்கொடுத்தலை

மறந்து அதனையே விட்டுக்கொடுத்துவிட்டு மனங்கசந்து 

வாழ்வை எப்படி வாழ்வதெனத் தெரியாது?!


திண்டாடித் தவிக்கும் பலரும் தாம் கடந்துவந்த 

சிறு சிறு புன்னகைத் தருணத்தை 

சற்றே நிதானித்துத் திரும்பிப் பார்த்தால்..., 


வாழ்வு எவ்வளவு எளிதானது 

இனிமைகள் நிறைந்ததென புரியத் துவங்கும்!


கவனமிலா கவன ஈர்ப்புகளை 

இனியேனும் கவனித்து வாழ்வில் 

இனிமை சேர்ப்போமாக!   


(முனைவர் தி. தங்கலட்சுமி.. அண்ணாமலையாரின் திருவடி நிழலில் தஞ்சம் புகுந்து, திருவண்ணாமலையின் தெய்வீக மலை தரிசனத்தின் அருட்பார்வையின் கீழ் வதிந்து சுவாசிக்கும் ஜீவன்! பேரறிவின் கீழ் அடிபணிந்து வாழும் சிற்றறிவு ஜீவி! அன்னை தந்தையர், உடன் பிறந்தாரோடு ஆனந்தமாக இன்பம் களிக்கும் பிறவி! இணையவழியில் ஈடுயிணையில்லா தொன்மைத் தமிழ்மொழியின் நயம் எடுத்தியம்பும் ஆசிரியை! தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பவர்).