Monday Motivation Short Story: பரிதவிப்பு!

Su.tha Arivalagan
Mar 30, 2026,11:09 AM IST

- முனைவர் தி. தங்கலட்சுமி


“பெத்தவ இல்லாதப்ப குட்டிய இப்படி லவட்டீட்டுப் போறானே படுபாவி” “இவன இதுக்கு முன்ன இந்த ஏரியாவுல பார்த்ததில்லையே” என்று யோசனையோடு குமைந்தாள் ருக்குப்பாட்டி.


வாய்விட்டு சத்தம் போட முடியாத நிலையில் மனதிற்குள் பரிதவித்தாள் பால்கனிப் பாட்டி. அன்று அவள் மௌனவிரதம். ஆமாம். ருக்குப்பாட்டி எப்போதும் அந்த புதுத்தெருவில் நடந்தும் வண்டி வாகனங்களில் பறந்தும் செல்வோரை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு தன் வீட்டுப் பால்கனியில் அமர்ந்திருப்பாள். 


இப்போது தன் தெருவில் வசிக்கும் நாய்க்காக பரிதாபப்பட்டாள். ஒரு வாரந்தான் ஆகிறது, அந்தத் தெருநாய் மூன்று குட்டிகள் போட்டு. காலை மாலை என அவ்வழியே பள்ளிக்குப் போகும் சிறுசுகள் நின்று நின்று அந்த அழகிய இளங்குட்டிகளை வேடிக்கை பார்த்துச் செல்கிறனர். 


இரவு நேரங்களில் டியூசன் முடித்துப் போகும் பவித்ரா, தன் தோழியோடு வீட்டைப் பார்த்துப் போகாமல், நாய்க்குட்டியைக் கொஞ்சிக் குலாவி விட்டுத்தான் செல்வாள். ருக்குப் பாட்டி பால்கனியில் இருப்பது தெருவில் செல்லும் பெரும்பாலானோருக்குத் தெரிய வாய்ப்பில்லை. 




அந்தக் காலத்துத் திண்ணைப் பாட்டி போல, இன்றைய காலத்துக் கண்காணிப்பு கேமிரா போல, நம்ம பால்கனிப் பாட்டி. யாருடனும் எந்த வம்புதும்புக்கும் போகமாட்டாள். ஆனால் ஒரு சாட்சி போல நடப்பவர்களையும் நடப்பவைகளையும் பார்த்துக் கொண்டே இருப்பாள். 


முதுமைக்காலத்தில் தனது தனிமைக்குத் துணையாக தன் கண்ணில்படும் ஜீவன்கள் எல்லாவற்றோடும் தோழமை பாராட்டி கண்டு ரசித்து தனது பொழுதைப் போக்கி வருபவள். தொலைக்காட்சித் தொடர்களில் எல்லாம் நாட்டம் கிடையாது. தன் வேலைகளைத் தானே செய்து கொள்ளும் அளவிற்கு திடகாத்திரமான தேகம் கொண்டவள் ருக்குப்பாட்டி. 


வீட்டுக் காரியங்கள் எல்லாம்கூட இங்கு அமர்ந்தே செய்வாள். வீட்டிற்குள் போதுமான அளவு வெளிச்சம் காற்றோட்டம் இல்லாததால், ஒரு நாளின் பெரும்பான்மை பொழுது பால்கனியில்தான் இருப்பாள். வெளிநாட்டில் இருக்கும் தன் மகன்கள், மருமகள்கள் மற்றும் பேரன் பேத்திகளோடு வீடியோ கால் செய்து பேசும் அளவிற்கு டிஜிட்டல் பாட்டிதான் நம் ருக்குப்பாட்டி.


வீட்டிற்குள் சிக்னல் கிடைக்காது என்பதாலும் அப்போதும் பால்கனியில்தான் தஞ்சம். இரவில் தூங்குவதற்குத்தான் வீட்டிற்குள் செல்வாள். அதிலும்கூட கோடை நாட்களில் பால்கனியிலேயே பாய் போட்டுப் படுத்திடுவாள். குறுகலான தெருதான் ஆனாலும் இன்றைய நவநாகரிக வழக்கத்திற்கு ஏற்ப நாலு வீட்டுக்கு ஒருத்தர் கார் வைத்துக் கொள்ளும் கௌரவத்தின்படி ருக்குப்பாட்டியின் எதிர்வீட்டிலும் கார் ஒன்று வாங்கி நிறுத்தி இருந்தனர். 


கார் ஷெட்டு என்ற வசதிகள் எல்லாம் கிடையாது. பாதி தெருவிலும் பாதி வீட்டின் முன்பக்க காம்பௌவுண்ட் சுவற்றுக்குள்ளுமாக அந்தக் காரை நிறுத்தி வைத்திருப்பார்கள். அதையே தனது வீடாக அந்தத் தெருநாய் புழங்கி வந்தது.  எங்கோ உணவு தேடி அலைந்து சுற்றிவிட்டு வந்தது அந்த நாய். தாயைக் கண்டதும் குட்டிகள் கும்மாளமாய் பால் குடிக்க முண்டின. 


தாய் நாய் காரின் அடியிலும் அக்கம்பக்கத்திலும் சுற்றிச் சுற்றி வந்து மோப்பம் பிடித்துத் தேடியது. இரண்டு குட்டிகளும் பால் குடிக்கும் வேளையில் தொலைந்து போன மற்ற குட்டியை நினைத்து பரிதவிப்பது போல அதன் கண்களில் தெரிவதாக உணர்ந்தாள் ருக்குப்பாட்டி.


*


அப்போது காரின் உரிமையாளர்கள் அந்த வீட்டின் மாடியில் குடித்தனம் செய்யும் தம்பதிகள் வெளி வேலைகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பினர். மனைவி இந்த நாய்களைப் பார்த்ததும் தன் கணவரிடம், “மூன்று குட்டி இருந்ததுங்க... இப்போ ரெண்டுதான் தெரியுது...”  என்றாள் சற்று வருத்தத்தோடு.


“அட விடும்மா... இப்ப என்ன? யாராவது வளர்க்க எடுத்துட்டுப் போயிருப்பாங்க. அதுதான் இன்னும் ரெண்டு குட்டி இருக்குல்ல” என்றார் அந்தக் கணவர்.


இந்த வார்த்தைகள் பாட்டியின் செவிப்பறையில் விழுந்து நினைவுகள் பின்னோக்கிச் சென்றன...


*


தனது ஒரே மகளுக்கு என்ன ஏது என்று கண்டறிய முடியாத உடல்நலக் கோளாறு காரணமாக செய்யாத வைத்தியம் இல்லை, தேடாத மருத்துவர் இல்லை என்னும்படியாக ஊர் ஊராக அலைந்தார்கள். அப்படியான வேளையில் ஒரு பெரிய மருத்துவமனையில் சில மாதங்களாகத் தங்கி இருந்து வைத்தியம் பார்த்தார்கள். அப்போது அக்கம்பக்கத்து படுக்கை நோயாளிகளின் உடன் இருப்பவர்கள் மிகவும் பரிவோடு விசாரிப்பார்கள்.


“இந்தப் பிள்ள ஒன்னுதானா உங்களுக்கு...?”


“இல்ல இவளுக்கு மூத்தது ரெண்டு அண்ணனுங்க இருக்காங்க” என்று சொல்லி வாய் மூடிய மறுநொடி…


“பிறகென்ன, அதான்... ரெண்டு ஆம்பளப் பயலுக இருக்காங்கல்ல...” 


“வருத்தப்படாதீங்க...” என்பார்கள்.


‘ரெண்டென்ன? நூறு பிள்ளையப் பெத்த காந்தாரியானாலும் சரி ஆறு பிள்ளையப் பெத்த குந்திதேவியானாலும் சரி, ஒத்தப் புள்ளதான, போனாபோவுதுன்னு எந்தத் தாயாவது நினைப்பாளா???’ 


வந்துட்டானுங்க, ஆறுதல் சொல்லுறேன்னுற பேருல… மனசுக்குள் கிடந்து மருகிப் பரிதவித்த நாட்கள் நினைவில் வந்து போயின ருக்குப்பாட்டிக்கு. 


*


மகளின் உடல்நலம் தேறிய பிறகுகூட அம்மாவும் பெண்ணும் இந்த சம்பவத்தைப் பற்றிப் பேசுவது உண்டு. அவ்வேளைகளில் மகள், ‘தள்ளி நின்னு வேடிக்கப் பார்க்குறவங்க அப்படித்தான் ஆறுதல் சொல்றதா நினச்சு  ஏதாவது சொல்லுவாங்க. நாம ஏன் அதப் பெரிசுபடுத்திக்கணும்மா...’ 


‘அது அப்படியில்லடா கண்ணு. “தலவலியும் திருகுவலியும் தனக்கு வந்தாத்தான் தெரியும்”கிறது மாதிரி, அந்த நேரத்தில என் புள்ள வாழ்வா? சாவானு போராடுற வேளையில இந்த வார்த்தைகள் பெத்தவங்களுக்கு எப்படிப்பட்ட வலியக் கொடுக்கும்னு மத்தவங்க யோசிக்கிறதே கிடையாது.


ஏதோ நாங்க செஞ்ச புண்ணியமோ? நம் வீட்டுப் பெரியவங்க செஞ்ச புண்ணியமோ? நீ நல்லபடியா பிழைச்சு வந்துட்ட, இல்லாது போயிருந்தா எங்க நிலமைய நினைச்சுப் பாரு... என்று  கண்ணீர் சிந்தி பரிதவித்த நினைவுகளும் உடன் வந்து போனது.


*


கூடவே, வெளியூரில் இருக்கும் தன் மகள் காலையில் தன்னிடம் தொலைபேசியில் சொல்லிய சம்பவமும் நினைவிற்கு வந்தது. தினமும் நம் பால்கனிப் பாட்டியின் மகள் காலை பத்துமணி சுமாருக்கு தவறாது அழைத்து, தன் அம்மாவை நலம் விசாரிப்பது வழக்கம். 


அதுபோன்றே, அன்று காலையிலும் அழைத்திருந்தாள். அப்போது, மகளின் குரல் மிகவும் சோகமாக ஒலித்தது. உடனே நம் ருக்குப்பாட்டி, “ஏன்டா கண்ணு, ஒடம்புக்கு எதுவும் சுகமில்லையா?” என்று பதறினாள்.


“ம்... என் உடம்புக்கு ஒன்னுமில்லம்மா... மனசுதான் காலையில எழுந்ததுல இருந்து ரொம்ப சங்கடமாவே இருக்கு” என்று பெருமூச்செறிந்தாள்.


‘ராத்திரியெல்லாம் பூன ரெண்டு சண்ட போடுற சத்தம் கேட்டுக்கிட்டே இருந்துச்சு. என்ன ஏதுன்னு ஒன்னும் புரியல. 

காலேல வெளிய வந்துப் பார்த்தா, நம்ம வீட்டுப் பக்கத்துல இருக்குற பூட்டிக்கிடக்குற வீட்டோட தோட்டத்துல ஒரு குட்டிப் பூன, கண்ணுகூட தொறக்காத குட்டிமா… குத்துயிரும் குலையுயிருமா கெடந்துஞ்சு.’ பாக்கவே பாவமா இருந்துச்சா... நா இவங்களக் கூப்பிட்டு, அதக் கொஞ்சம் வெளிய எடுத்து விட்டீங்கன்னா, தாய்ப்பூன வந்து பால் கொடுத்து பாத்துக்கும்ல...’ என்று உதவி பண்ணலாம்னு சொன்னேம்மா.’


ஆனா அதுவே அந்தப் பூனைக்கு வினையா போச்சு! இவங்க தோட்டத்துல இறங்கி அத எடுத்து வாசப்படிலதா வைச்சுருப்பாங்க... எங்கிருந்தோ ஓடோடி வந்த தெருநாயி ஒன்னு லபக்னு கவ்விக்கிட்டு ஓடிப் போயிருச்சு.


நா.. சும்மா இருந்திருந்தாலாவது அது இன்னும் கொஞ்ச நேரமாவது உசுரோட இருந்திருக்கும்....’

மகள் மிகவும் மனம் வருந்தி தன் அம்மாவிடம் புலம்பினாள்.


‘கொஞ்ச நேரத்திற்கெல்லாம், எங்கிருந்தோ அந்தக் குட்டிப் பூனையோட அம்மா பூன வந்தது. நம்ம வீட்டுக் கோட்டைச் சுவரில் நின்னு தோட்டத்தில குட்டி விழுந்துகிடந்த இடத்தையே பரிதாபமா பாத்துட்டே நின்னது. பிறகு சோகமாக மெதுவாகப் போனது. மீண்டும் அதே இடத்திற்கு வந்து வந்து பாத்துக்கிட்டே இருந்துச்சு. 


இதையெல்லாம் பாக்கப் பாக்க மனசிற்கு ரொம்ப சங்கடமா இருந்துச்சும்மா.” என்று கண்களில் கண்ணீர்விட்டு அழவே செய்துவிட்டாள். 


ருக்குப்பாட்டியும் ஏதேதோ சமாதானம் சொல்லி அழுத மகளைத் தேற்றினார்.


ருக்குப்பாட்டி இப்போது அதையும் நினைத்துப் பார்த்து வேதனைப்பட்டாள். 


தாய் என்றால் அது நாயோ, பூனையோ, மனுஷியோ யாராய் இருந்தாலும் பிள்ளையைப் பறி கொடுப்பது என்பது பரிதாபகரமானதே என்று பலவாறாக தனக்குள் எண்ணிக் கொண்டே உறக்கமின்றி யோசனையில் உழன்று தவித்தாள்.


(கட்டுரையாளர் தி. தங்கலட்சுமி.. அண்ணாமலையாரின் திருவடி நிழலில் தஞ்சம் புகுந்து, திருவண்ணாமலையின் தெய்வீக மலை தரிசனத்தின் அருட்பார்வையின் கீழ் வதிந்து சுவாசிக்கும் ஜீவன்! பேரறிவின் கீழ் அடிபணிந்து வாழும் சிற்றறிவு ஜீவி! அன்னை தந்தையர், உடன் பிறந்தாரோடு ஆனந்தமாக இன்பம் களிக்கும் பிறவி! இணையவழியில் ஈடுயிணையில்லா தொன்மைத் தமிழ்மொழியின் நயம் எடுத்தியம்பும் ஆசிரியை! தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பவர்).