சென்னையில்.. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படும் அபாயம்!
சென்னை: சார் நடவடிக்கையின் காரணமாக, சென்னை வாக்காளர் பட்டியலில் இருந்து 10.4 லட்சத்துக்கும் அதிகமானோர் நீக்கப்படும் வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
சென்னையில் 16 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. தற்போது சார் பணிகள் நடந்து வருகின்றன. இதில், வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 10 லட்சத்து 41 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சென்னை முழுவதும் உள்ள மொத்த வாக்காளர் எண்ணிக்கை 40.04 லட்சம் ஆகும். தேர்தல் ஆணையம் சார் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், அடையாளம் கண்டுபிடிக்க முடியாதவர்கள் என கிட்டத்தட்ட 10.4 லட்சம் வாக்காளர்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளதாம். சார் பணிகளின் முடிவில் இவர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்படலாம் என்று தெரிகிறது. இது இப்போதைய கணிப்பு. டிசம்பர் 11 ஆம் தேதி திருத்தப் பணி முடிவடையும்போது நீக்கப்படக்கூடிய பெயர்களின் எண்ணிக்கை மேலும் உயரவும் வாய்ப்புள்ளது.
இறப்பு (Death)
நிரந்தரமாகப் புலம்பெயர்ந்தவர்கள் (Permanently Shifted)
காணாமல் போனவர்கள் அல்லது இருப்பிடத்தில் இல்லாதவர்கள் (Untraceable or Absent)
இரட்டைப் பதிவுகள் (Double Entry) ஆகிய காரணங்களுக்காக வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படும்.
சென்னையைப் பொறுத்தவரை, டிசம்பர் 1 ஆம் தேதி நிலவரப்படி, நிரந்தரமாகப் புலம்பெயர்ந்தவர்கள் என்ற பிரிவின் கீழ் அதிகபட்சமாக 8,39,100 பெயர்களும், இறந்தவர்கள் பிரிவின் கீழ் 1,49,696 பெயர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
வேளச்சேரியில்தான் அதிகம்
தொகுதிகள் வாரியாகப் பார்க்கும்போது, அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்களை இழக்கும் தொகுதியாக வேளச்சேரி (90,137) உள்ளது. இதைத் தொடர்ந்து மயிலாப்பூர் (88,280), அண்ணா நகர் (84,358), சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி (83,787) போன்ற தொகுதிகளிலும் அதிக எண்ணிக்கையிலான பெயர்கள் நீக்கப்பட உள்ளனர். திருவிக நகர் தொகுதியில் மிகக் குறைந்த அளவாக 32,795 பெயர்கள் நீக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில்தான் தற்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அளவுக்கு வாக்காளர்கள் நீக்கப்படுவதால், அந்தத் தொகுதியில் தேர்தல் முடிவுகளில் பெரும் தாக்கம் ஏற்படக் கூடும் என்று தெரிகிறது. இந்த வகையில் பார்த்தால் தமிழ்நாடு முழுவதும் கிட்டத்தட்ட 70 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள் என்றும் தெரிகிறது.