Mother's day Poem: அன்னை
May 10, 2026,03:42 PM IST
- அ. தாமஸ்
பெண்ணாய் பிறந்து உலகை ரசித்து உலகால் ரசிக்கப்பட்டவள் நீ!
பூப்பெய்தும் காலம் வரை காத்திருந்து
பூப்பெய்ததால் தாய்மையாகும் தகுதியை தரணிக்கு அடையாளப்படுத்தியவள் நீ!
மாதம் தோறும் உதிரம் உதிர்த்து மாதவிடாய் காலத்து வலியால் எதையும் தாங்கும் இதயம் உணர்த்தியவள் நீ!
மானுடம் தலைக்க கன்னியம் கலைந்து புத்துயிரை இப்புவிக்கு பரிசளித்து புண்ணியம் செய்தவள் நீ!
வறுமையிலும் வளமையிலும் கூட உன் உதிரத்தை உருமாற்றி பாலால் பசி தீர்த்தவள் நீ!
உறவும் உணர்வும் கொடுத்து நடையோடு பேச்சையும் பரிசளித்தவள் நீ!
நல்லவையும் அல்லவையும் அன்போடு அடையாளப்படுத்தியவள் நீ!
கருவுற்றும் தாயானாய் கருவுறாமலே கருணையுற்றும் தாயானாய் நீ!
பெற்ற பிள்ளையையும் மற்ற பிள்ளையையும் மாற்றமில்லாமல் வளர்த்து தாய்மையை பெருமைப்படுத்தியவள் நீ!
தட்டிக் கொடுத்து நித்தம் கட்டிக் காப்பவள் நீ!
எம் ஒவ்வொரு நிலை வளர்ச்சியையுமே உம் உயரிய மகிழ்ச்சியாய் உணர்பவள் நீ!
எம் மாற்றமும் ஏற்றமும் நீ!
எம் முயற்சியும் உயற்சியும் நீ!
தடைகள் கடந்து தனித்தடம் பதித்து நாளைய உலகில் புதுத்தடம் அமைப்பவள் நீ!
பெண்ணாய் பிறந்த அனைவருமே தாய்மையின் இலக்கணமே என்பதை உணர்ந்து தாய்மைப் பேற்றைத் தனதாக்க தியாகங்கள் பல செய்து தரணி காக்கும் தியாகச் சுடர்களாம் எம் அன்னையர் அனைவருக்கும் எம் உள்ளம் நிறை அன்னையர் தின வாழ்த்துகள்.
(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)