அதிமுக.,வில் இருந்து விலகுகிறேன்: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு
சென்னை: தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் நிகழ்வாக, அ.தி.மு.க-வின் முக்கிய நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
"பதவிக்காக வந்தவன் அல்ல" - விஜயபாஸ்கர் உருக்கம்
தனது விலகல் கடிதத்தில் அ.தி.மு.க மீதான தனது விசுவாசத்தைக் குறிப்பிட்டுள்ள அவர், "நான் பதவிக்காகவோ, சுயநலத்திற்காகவோ இந்த இயக்கத்திற்கு வந்தவன் அல்ல; இரத்தமும் சதையுமாய் இந்த இயக்கத்தை என் மூச்சாகக் கருதி வாழ்ந்தவன்" என்று தெரிவித்துள்ளார். மறைந்த தலைவர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் வழியில் நின்று, கட்சி சந்தித்த சோதனையான காலகட்டங்களில் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு (இ.பி.எஸ்) ஆதரவாக உறுதியுடன் நின்றதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தி.மு.க ஆட்சியில் சந்தித்த சவால்கள் மற்றும் வழக்குகள்
கடந்த ஐந்து ஆண்டுகால தி.மு.க ஆட்சியில் கரூர் மாவட்டத்தில் தான் சந்தித்த அரசியல் சவால்களையும், தன் மீது போடப்பட்ட வழக்குகளையும் அறிக்கையில் விரிவாகப் பட்டியலிட்டுள்ளார். தன் மீது 43 பொய் வழக்குகள் சுமத்தப்பட்டதாகவும், தனது குடும்பத்தினர் மற்றும் கட்சியின் தொண்டர்கள் மீது 100-க்கும் மேற்பட்ட கொடூரமான வழக்குகள் பாய்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கரூரில் செந்தில் பாலாஜியின் அதிகார பலம் மற்றும் பண பலத்தை எதிர்த்து, நெஞ்சுரத்துடன் அ.தி.மு.க கொடியை மீண்டும் ஏற்றியதாக அவர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
விலகலுக்கான முக்கிய காரணம் என்ன?
இவ்வளவு தியாகங்கள் செய்தும் தனக்கு துரோகமே பரிசாகக் கிடைத்துள்ளது என்று அவர் வேதனை தெரிவித்துள்ளார். குறிப்பாக, தி.மு.க-வுடன் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சிக்கும் எடப்பாடி பழனிசாமியின் (இ.பி.எஸ்) தற்போதைய அரசியல் செயல்பாடுகளைத் தம்மால் எற்க முடியவில்லை என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். யாருடைய மக்கள் விரோத, அராஜக ஆட்சியை வீழ்த்த இத்தனை வழக்குகளையும், ரணங்களையும் தாங்கினோமோ, அவர்களுடனேயே கைகோர்க்கும் தலைமைத்துவத்தின் முடிவை ஏற்க முடியாது என்ற காரணத்தினாலேயே இந்த விலகல் முடிவை எடுத்துள்ளதாக அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
கரூர் மாவட்ட அ.தி.மு.க-வின் தூணாக விளங்கிய எம்.ஆர்.விஜயபாஸ்கரின் இந்த திடீர் விலகல், அ.தி.மு.க தலைமைக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. நேற்று தனது எம்எல்ஏ., பதவியை ராஜினாமா செய்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஜூலை 02ம் தேதி தவெக.,வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், அவர் அதிமுக.,வில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.