சென்னை மாணவர்களுக்கு குட் நியூஸ்: இன்று முதல் 42 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
Jul 13, 2026,10:25 AM IST
சென்னை: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பள்ளி மாணவர்கள் பாதுகாப்பாகவும், கூட்ட நெரிசலின்றிப் பயணம் செய்யவும் ஏதுவாக, இன்று முதல் கூடுதலாக 42 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக மாநகர் போக்குவரத்துக் கழகம் (MTC) அறிவித்துள்ளது.
தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் உத்தரவின்படியும், போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் வழிகாட்டுதலின்படியும் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எம்டிசி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மாணவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் இருந்து பள்ளிக்கும், அதேபோல் பள்ளி முடிந்த பிறகு வீட்டிற்கும் எவ்வித சிரமமுமின்றிச் செல்ல இந்தச் சிறப்புப் பேருந்துகள் வழிவகை செய்யும். முதற்கட்டமாக, 41 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பயன்பெறும் வகையில், நாளொன்றுக்கு 84 பயண நடைகள் (அதாவது போக 22, வர 22 டிரிப்) இயக்கப்பட உள்ளன.
காலை மற்றும் மாலை நேரங்களில் அரசுப் பேருந்துகளில் ஏற்படும் கூட்ட நெரிசலைக் குறைப்பதும், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதுமே இந்தச் சிறப்புப் பேருந்து சேவையின் முக்கிய நோக்கமாகும்.