தங்கத்தை வீட்டில் பூட்டி வைக்காதீர்கள்: முதலீட்டாளர்களுக்கு முகேஷ் அம்பானி அறிவுரை
மும்பை: இந்தியர்கள் தங்கம் மற்றும் வெள்ளியை வீட்டில் பூட்டி வைப்பதைத் தவிர்த்து, அவற்றை நிதிச் சந்தைகளில் முறையாக முதலீடு செய்ய முன்வர வேண்டும் என்று ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். இதன் மூலம் கூட்டு வட்டி முறையில் செல்வம் பல மடங்கு பெருகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியர்களின் சேமிப்புப் பழக்கம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், கடந்த 6 தசாப்தங்களாக (60 ஆண்டுகள்) இந்தியர்கள் மிகச்சிறந்த முறையில் சேமிப்பில் ஈடுபட்டு வருவதாகப் பாராட்டியுள்ளார். எனினும், அந்தச் சேமிப்புகள் அனைத்தும் சரியான முறையில் முதலீடு செய்யப்படுகிறதா என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.
பெரும்பாலான இந்தியக் குடும்பங்களில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளாகவோ அல்லது கட்டிகளாகவோ வீடுகளிலும், வங்கி லாக்கர்களிலும் முடங்கிக் கிடக்கின்றன. இது ஒரு பாதுகாப்பான சேமிப்பாகக் கருதப்பட்டாலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கோ அல்லது தனிநபரின் கூடுதல் வருமானத்திற்கோ இது பெரிய அளவில் உதவுவதில்லை என்பதை அவர் மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
"தங்கம் மற்றும் வெள்ளியாக பணத்தை வீடுகளில் பூட்டி வைக்காமல், பங்குச்சந்தை, பரஸ்பர நிதிகள் (Mutual Funds) போன்ற நிதிச் சந்தைகளில் முதலீடு செய்தால், அவை கூட்டு வட்டி (Compound Interest) முறையில் அசுர வளர்ச்சி அடையும்," என முகேஷ் அம்பானி கூறியுள்ளார். நிதிச் சந்தைகளில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் நீண்ட கால அடிப்படையில் பணவீக்கத்தைத் தாண்டி அதிக லாபத்தை ஈட்டித் தரும் வல்லமை கொண்டவை. குறிப்பாக, கூட்டு வட்டி முறையானது ஒரு சிறு முதலீட்டை காலப்போக்கில் மிகப்பெரிய சொத்தாக மாற்றும் திறனுடையது.
செயலற்ற நிலையில் உள்ள தங்கத்தை நிதிச் சார்ந்த முதலீடுகளாக (Digital Gold, Gold Bonds) மாற்றலாம். மக்கள் தங்கள் பணத்தைச் சந்தையில் முதலீடு செய்யும்போது, அது நாட்டின் பணப்புழக்கத்தை அதிகரித்து பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும். நீண்ட கால முதலீடுகள் மூலம் உங்கள் செல்வம் பல மடங்கு பெருக வாய்ப்புள்ளது.
பணத்தைச் சேமிப்பது எவ்வளவு முக்கியமோ, அதைச் சரியான இடத்தில் வளர விடுவது அதைவிட முக்கியம் என அம்பானி கேட்டுக் கொண்டுள்ளார். நவீன நிதி மேலாண்மை முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் இந்தியக் குடும்பங்களின் பொருளாதார நிலை மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.