பாசனத்திற்காக முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

Su.tha Arivalagan
Aug 08, 2026,11:48 AM IST

தேனி: தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும், தென் மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கும் முல்லை பெரியாறு அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைகளுக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.


நீர்திறப்பு விவரங்கள் :


முல்லை பெரியாறு அணையில் இருந்து விநாடிக்கு மொத்தம் 350 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.


தமிழக விவசாயப் பாசனத்திற்காக: விநாடிக்கு 200 கனஅடி நீர்.


மதுரை மாநகராட்சி குடிநீர் தேவைக்காக: விநாடிக்கு 150 கனஅடி நீர்.


இந்த நீர் திறப்பானது தொடர்ந்து 120 நாட்களுக்கு மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


14,707 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடையும்




தற்போது திறக்கப்பட்டுள்ள இந்த நீரின் மூலம், கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள சுமார் 14,707 ஏக்கர் விளைநிலங்கள் நேரடி பாசன வசதியைப் பெறவுள்ளன. நீண்ட நாட்களாக நீர் திறப்புக்காகக் காத்திருந்த கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயிகள், இந்த அறிவிப்பால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முதல் போக விவசாயப் பணிகளை மேற்கொள்வதற்கு இந்த நீர் பெரிதும் துணையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


2 மாதங்கள் தாமதமாக திறக்கப்பட்ட நீர்

பொதுவாக, தென்மேற்கு பருவமழை தொடங்கும் காலத்தில் முல்லை பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். இருப்பினும், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமானதன் காரணமாக, வழக்கமான கால அட்டவணையை விட 2 மாதங்கள் கழித்தே பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டுள்ளது.


மழை தாமதமானதால் பாசனப் பணிகள் தள்ளிப்போன நிலவரத்தில், தற்போது அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டிருப்பது கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகளுக்கு மட்டுமன்றி, மதுரை மாநகர மக்களுக்குமான குடிநீர் பிரச்சனையைத் தீர்க்கும் ஒரு முக்கிய நிவாரணமாக அமைந்துள்ளது. அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் மற்றும் விவசாயிகள் ஆற்றுப் பகுதிகளைக் கடக்கும்போதும், விவசாயப் பணிகளின் போதும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.