CSK Vs MI: சேப்பாக்கத்தில் அசத்திய சென்னை சூப்பர் கிங்ஸ்.. பிரமாத வெற்றி.. கார்த்திக் சர்மா அபாரம்!
சென்னை: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி 159 ரன்களுக்கு அந்த அணியை நிறுத்திய நிலையில் பின்னர் பேட்டிங்கிலும் பிரமாதமாக விளையாடி, சிறப்பான சேஸிங்கையும் முடித்து, அட்டகாசமான வெற்றியையும் பெற்றது ருத்துராஜ் தலைமையிலான டீம்.
சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். மும்பை அணிக்கு எதிரான சென்னை அணியின் பந்து வீச்சு இன்று சிறப்பாக இருந்தது. இடையில் லேசான தொய்வு ஏற்பட்டபோதிலும், சென்னை பவுலர்கள் சுதாரித்து மீண்டு வந்தனர்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. மும்பை இந்தியன்ஸ் அணியில், நமன் தீர் அதிரடியாக விளையாடி 37 பந்துகளில் 57 ரன்கள் குவித்தார். அதேபோல ரியான் ரிக்கெல்டன் 24 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார்.
சூர்யகுமார் யாதவ் 12 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் ஹர்திக் பாண்டியா 18 ரன்களில் வெளியேறினார். மற்றவர்கள் பெரிய அளவில் ஆடவில்லை.
சென்னை அணியின் சார்பில் சிறப்பாக பந்துவீசிய அன்ஷுல் கம்போஜ் 4 ஓவர்களில் 32 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். நூர் அகமது 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சென்னை அணியில் பிரசாந்த் வீர் மற்றும் ராமகிருஷ்ணா கோஷ் ஆகியோர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர். மும்பை அணியில் கிரிஷ் பகத் சேர்க்கப்பட்டுள்ளார், மேலும் ரகு சர்மா அறிமுக வீரராகக் களமிறங்கினார்.
அதைத் தொடர்ந்து சேஸிங்கில் இறங்கிய சென்னை அணிக்கு சஞ்சு சாம்சன் ஏமாற்றம் அளித்தாலும் கூட கேப்டன் ருத்துராஜ் போட்டியைக் கையில் எடுத்துக் கொண்டு அசத்தினார். பிரமாதமாக ஆடிய அவர் அரை சதம் போட்டு அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.
ஆனால் உண்மையில் இன்றைய போட்டியின் நாயகன் கார்த்திக் சர்மாதான். சிறப்பானதொரு ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் அதிரடியாக ஆடி கடைசி நேரத்தில் அரை சதம் போட்டதோடு அணிக்கும் சிறப்பான வெற்றியைத் தேடிக் கொடுத்தார். அவரது முதல் ஐபிஎல் அரை சதம் இது என்பது கூடுதல் சிறப்பாகும்.
இன்றைய வெற்றி சென்னை அணிக்குத் தேவையானதாக இருந்தது. அதை சிறப்பான முறையில் சிஎஸ்கே பெற்றது குறிப்பிடத்தக்கது.