'முரசு' தீவிர புயல் எச்சரிக்கை: சென்னைக்கு கிழக்கே மையம்; மீனவர்களுக்கு தடை & விமானங்கள் ரத்து!

Su.tha Arivalagan
Nov 02, 2026,12:20 PM IST

சென்னை : வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ‘முரசு’ தீவிர புயல் மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. வட தமிழக கடற்கரையில் சென்னைக்கு கிழக்கே 200 கி.மீ. தொலைவில் இந்த புயல் மையம் கொண்டுள்ளது என வானிலை மையம் தெரிவித்து உள்ளது.  


மழை தொடரும் :


முரசு புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பகல் 1 மணி வரையிலும் மிதமான மழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதே போல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டவங்களில் பகல் 3 வரை மிதமான மழை தொடர வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 


மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை:




வடக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகள், தென்மேற்கு வங்காள விரிகுடா ஆகியப் பகுதிகளில் நவம்பர் 4-ஆம் தேதி காலை வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அனைத்து மீன்பிடிப் பணிகளையும் முழுமையாக நிறுத்தி வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக அருகில் உள்ள துறைமுகம் அல்லது கரைக்குத் திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். படகுகளைக் கண்காணித்து, பாதுகாப்பாகக் கரைக்குத் திரும்ப வழிகாட்டும் பணியில் மீன்வளத் துறையும், துறைமுக அதிகாரிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.   


விமானச் சேவைகள் ரத்து:


‘முரசு’ புயல் எச்சரிக்கை மற்றும் மோசமான வானிலை காரணமாகச் சென்னை விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானச் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இன்று (02.11.2026) சென்னையில் இருந்து இயக்கப்படவிருந்த 5 புறப்பாடு விமானங்கள் மற்றும் 6 வருகை விமானங்கள் என மொத்தம் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில் விஜயவாடா, ராஜமுந்திரி, கடப்பா மற்றும் திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட வழித்தடங்களுக்கான விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.   


ஆந்திராவிற்கு உதவிகள்:


‘முரசு’ புயல் மீட்புப் பணிகள் தொடர்பாக, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, முதல்வர் விஜயிடம் தொலைபேசியில் உரையாடினார். புயல் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்கு உதவுமாறு அவர் கோரிக்கை விடுத்தார். இக்கோரிக்கையை உடனடியாக ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில், ஆந்திராவிற்குத் தேவையான மின் உபகரணங்கள் மற்றும் மீட்புப் பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். கடலோரப் பகுதி மக்கள் மற்றும் பயணிகள் வானிலை அறிவிப்புகளைக் கூர்ந்து கவனித்துத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.