சிவனை உள்ளம் உருக பாடியதால் முருகர் என்று பெயர் பெற்ற.. முருக நாயனார்!
- கலைவாணி கோபால்
அன்றைய சோழ நாட்டில் மிகப்பெரிய திருத்தலமாக விளங்கிய ஊர் திருப்புகலூர். (அதாவது, இன்றைய நாகப்பட்டினத்தில் உள்ள திருக்கண்ணபுரம் அருகில் உள்ளது)
திருப்புகலூர் தளத்தில் அவதரித்தவர் முருகநாயனார். இவர், சிவனை உள்ளம் உருக உருகி பாடியதால் முருகர் என்று அழைக்கப்படுகிறார் என்றும், சிலர் கூறுவது உண்டு. இவர், அந்தணர் குலத்தில் பிறந்தவர்.
அந்தணர் என்பதால் இவருடைய பணியும் அன்றாட ஆலய பணிகள் செய்வதும் அது மட்டுமல்ல.. தினமும் இறைவனுக்காக பூக்களைப் பறித்து தொடுத்து மாலை ஆக்கி சாற்றுவதே மிக உயரிய பணியாக செய்து வந்தார்.
திருப்புகலூர் மூலவரான அக்னீஸ்வரருக்கும், அதுபோக மேலும் மூன்று சன்னதிகள் உண்டு .அவற்றில் பூதேஸ்வரர், வர்தமானீஸ்வரர், பவியேஸஷ்வரர் இவர்கள் மூன்று தத்துவங்களின் வடிவமாகும் .கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என மூன்று நிலைகளை சொல்வதாக கருதப்படுகிறது.
இந்த ஆலயத்தில் அவருக்கு கொடுக்கப்பட்ட பணி மலர் அலங்காரம் செய்வது. பூஜைக்கான பூக்களை நந்தவனத்தில் இருந்தும் ஓடையின் கறைகளில், மரங்களில் ,இருந்தும் கொண்டு வந்து தொடுத்து, இறைவனுக்கு சாற்றுவது .அவரின் பணியாக இருந்தது.
"பூ" என்பது இல்லாமல் பூஜை இல்லை .என்பது எல்லா இந்துக்களும் அறிந்த ஒன்று. பூஜித்தல் ;என்பதை பூவினை அடிப்படையாகக் கொண்டது. சிவனின் சன்னதியில் பஞ்ச பூதங்களை குறிக்கும் ஐந்து பொருட்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என்பது விதி.
நெருப்புத் தத்துவத்தின் தீபம்
வாயு தத்துவத்தின் அடிப்படையில் தூபம்
நிலத் தத்துவத்தின் அடிப்படையில் சந்தனம்
நீர் தத்துவத்தின் அடிப்படையில் நீர்
ஆகாய தத்துவத்தின் அடிப்படையில் பூ எனும் ஐந்து மகா பொருட்கள் கட்டாயம் இருக்க வேண்டும்.
வழிபாட்டில் 'பூ' மிகவும் முக்கியம் என்பதை எறிபக்த நாயனார் வரலாற்றிலும், செறுத்துணை நாயனார் வரலாற்றிலும் ,நாம் பார்த்திருக்கிறோம்.
'பூ' என்பது சாதாரணமானது அல்ல !சக்திமிக்க மரங்கள் ,செடிகள், கொடிகள் ,நீரில் வளரும் தாவரங்கள் என ஒவ்வொன்றாய் அடையாளம் கண்டு எதெல்லாம் பிரபஞ்ச சக்தியினை ஈர்க்குமோ! அவற்றின் மலர்களை இறைவனுக்கு சாற்றுவார்கள்.
பூஜைக்குரிய மலர்கள் என்பது கோட்டுட்பூ (மரங்களில் இருந்து பூக்கும் பூக்கள்)நிலப்பூ (நீர்நிலைகளில் போக்கும் பூக்கள்) கொடிப்பூ (கொடிகளில் போக்கும் பூக்கள்) நீர்ப்பூ(நீர் நிலைகளில் பூக்கும் பூக்கள்)என பல வகையாக பிரிக்கப்பட்டுள்ளன.
பூஜைக்குரிய மலர்களை எல்லாம் சும்மா பறித்து விட முடியாது. குளித்து சுத்தமாக திருநீறு இட்டு கிளம்ப வேண்டும். மூக்கை ஒரு துணியால் மூடிக்கொள்ள வேண்டும். ஒருவேளை நோய் எதுவும் பறிப்பவரை தொடுப்பவரை தாக்கியிருந்தால் அவர் மூலம் நோய் பரவாமல் இருக்க இந்த ஏற்பாடு. தேனீக்கள் வாய் வைத்து விட்டால் அந்த பூ 'எச்சில் ஆகும் என்பதால், தேனீக்கள் அமரும் முன் பூக்களை பறிக்க வேண்டும். வாடிய மலர்கள், பூச்சி கடித்த மலர்கள், மலராத மொட்டுக்கள், எல்லாம் பறிக்க கூடாதவை. இவைகள் அர்ச்சனைக்கு உகந்தது அல்ல.
நான்கு வகையான பூக்களை அவர் தினமும் பறிக்க வேண்டும். கோட்ப்பூ (மரங்களில் பூக்கும் பூக்கள் உதாரணமாக ....பாதிரி வில்வம், செண்பகம்.)
கொடிப்பூ என்பது (கொடியில் பூக்கும் வகை உதாரணமாக... முல்லைக்கொடி போன்ற கொடிகளில் இருந்து பூக்கும் பூக்கள்)
நீர்ப்பூ (நீர்நிலைகளில் பூக்கும் செங்கழுநீர், தாமரை, போன்ற பூக்கள்)
நிலப்பூ (செடியில் பூக்கும் பூக்கள் மல்லிகை ,பிச்சி போன்றவை.)
இந்த நான்கு வகை பூக்களை பறித்து வர வேண்டிய பணி அடியாருக்கு இருந்தது.
இதிலும் ,இவை அனைத்தும் ஒரே நேரத்தில் பூப்பது இல்லை. அதிகாலை தொடங்கி மாலை வரை ஒவ்வொரு நேரங்களில் ஆறு நேரத்தில் மலரும்.
இப்படிஆறு போழுதுகளில் புதுமலரை கொண்டு செய்யப்படுவது தான் ஆறு கால பூஜை. ஒரு நாளில் ஆறு முறை மலரை பறிக்க வேண்டிய கடமை அவருக்கு உண்டு.
முருக நாயனார் மாலைகள் தொடுக்கும்போது அவை, கற்சிலை என்ற பாராமல்.... சிவபெருமானே! என்பது போல உருவகப்படுத்தி மாலைகளை எந்த ஒரு அசௌகரியமும் ஏற்படாத அளவு நுணுக்கமாக அவர் மாலைகளை தொடுத்து இறைவனுக்கு சிவ நாமத்தை ஜெபித்து பவித்திரமாக தயாரித்து பகவானுக்கு சாற்றி வரும் பெரும் பணியை செய்து வந்தார்.
பெரும்பாலும் நாயனார் பிரார்த்தனை என்னவாக இருக்கும் என்றால் இறைவனிடம் சரணாகதி அடைந்து கைலாயம் செல்வது.
நாயனாரின் பிரார்த்தனையை நிறைவேற்ற சிவபெருமான் தனது நாடகத்தை தொடங்கினார்.
அதன்படியே ,திருப்புகலூர் முருகனார் மடத்துக்கு திருநீலநக்க நாயனார் சில யாகங்களுக்காக அங்கு வந்திருந்தார். அப்போது முருக நாயனார்க்கும் அவருக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டது. ஒரு அடியாரை இன்னொரு அடியார் அடையாளம் கண்டு கொள்வது என்பது ஒரு சாமானியனால் முடியாது.
அது அடியாரால் மட்டுமே முடியும். அவ்வாறு நீலநக்க நாயனார் முருக நாயனாரை அடையாளம் கண்டு கொண்டார்.
இருவருக்கும் நல்ல நட்பு ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல், அங்கு இன்னொரு அதிசயமும் நடந்தது. திருஞானசம்பந்தர் பெருமான் இந்த மடத்துக்கு எழுந்தருளினார்.
சம்பந்தர் எங்கு சென்றாலும், தனியாக செல்பவர் அல்ல! அவரின் பல்லக்கு சேவகர்கள், பாடும் பாணர்கள்,சைவ அடியார்கள், சைவத்தொண்டார்கள் ,என பெறும் குழுவே சம்மந்தருடன் பயணம் செய்யும். திருநீலகண்ட நாயனார் யாழ்ப்பாணரும் ,அவர் மனைவியும் மதங்க சூடாமணி அம்மையாரும், அவர்ருடன் திருப்புகலூர் ஆலயத்திற்கு எழுந்தருளினார்கள்.
இனியும் தன்னடியாரான முருக நாயனாரை அங்கு விட்டு வைக்க மனமில்லாத சிவபெருமான்.
அவருக்கான காலம் நெருங்கியதை உணர்ந்து 16 வயதான,..
ஞானசம்பந்தருக்கு திருமணம் நிச்சயம் செய்து.,அதற்கு வேதம் ஓதும் கடமை நீல நக்கனாருக்கும் ,இசை பாடும் பொறுப்பு திருநீலகண்ட யாழ்ப்பாணருக்கும் ,மலர் அலங்காரம் செய்ய முருகா நாயனாரும் அழைக்கப்பட்டார் கள். அதை செவ்வனே செய்து கொண்டும் இருந்தார்கள்.
திருநல்லூரில் அந்த வைபவம் நிகழ்ந்து கொண்டிருந்தது. திருமணம் முடிந்ததும் மணமக்கள் மேடையை சுற்றி வரும்போது.... யாக குண்டத்தின் நெருப்பு பெரியதாய் வளர்ந்தது. அதன் நடுவில் குகை போன்ற அமைப்பு இருந்தது.
அதுதான் கைலாயம் செல்லும் வாசல் என்பதை உணர்ந்த திருஞானசம்பந்தர் அவர் தான் மட்டும் கைலாயம் செல்லாமல் ....ஈசன் விருப்பப்படி அவர் அடியார்களையும் சேர்த்து அழைத்துச் செல்ல விரும்பினார்.
திருநீல நக்க நாயனார், திருநீலகண்ட யாழ்ப்பாணரும், யாக குண்டத்தின் நெருப்பின் வழியே சம்மந்தரால் உள்ளே அனுப்பப்பட்டனர். தொலைவில் நின்ற முருகனாயினாரையும் கைநீட்டி அழைத்தார்.
நடந்து கொண்டிருப்பது என்ன? என்று தெரியாமல் ஆச்சரியத்தில் மூழ்கி இருந்தார் நாயனார். அருகில் சென்று அவரையும் நெருப்பு குண்ட வாசலில் செல்லப் பணிந்தார் சம்பந்தர்.
பின் தன் மனைவியோடு அந்த வாசல் வழியே உட்புகந்தார் சம்பந்தர். திருப்புகழூரில் அவதரித்து அங்கு திருப்பணிகள் செய்து சிவன் அருளால் திருஞானசம்பந்தருடன் கைலாயம் ஏகிய முருக நாயனார். பக்தி என்னும் பூவை தொடுத்து சிவனுக்கு மாலையாக சாற்றி கைலாயம் ஏகினார்.
வைகாசி மூல நட்சத்திரம் முருக நாயனாரின் குருபூஜை நாள் .அவருக்கு மட்டுமல்லாமல், திருஞானசம்பந்தர் திரு நீல நக்க நாயனார், திருநீலகண்ட யாழ்ப்பாணர். எல்லோருடைய குரு பூஜையும் அன்றே பெரும் விமர்சையாக சிவ ஆலயங்களில் நடைபெற்று வருகின்றது.
அது மட்டுமல்லாமல்' திருப்புகலூர் ஆலயத்தில் தான் திருநாவுக்கரச பெருமான் முக்தி அடைந்தார். சுந்தரருக்கு செங்கல்லை பசும்பொன்னாக மாற்றி தந்த இறைவன் திருப்புகலூர் பெருமான் என பல்வேறு அதிசயங்கள் கொண்டது திருப்புகலூர் தலம்.