மரத்திலேயே விளையும் விட்டமின் மாத்திரை.. வரலாறு கூறும் சமையல் (பகுதி 5)
- "பக்தித் தென்றல்" பாவை.பு
இந்தியா விவசாயத்தில் தன்னிறைவு பெற்று 357 மில்லியன் டன் உணவுப்பொருட்களை உற்பத்தி செய்து உலகளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. உலகின் இரண்டாவது பெரிய விவசாய நிலப்பரப்பையும் (157.35 மில்லியன் ஹெக்டேர்) கொண்டு நாட்டின் பொருளாதாரத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது...
பால், முந்திரி, தேங்காய், தேயிலை, மஞ்சள், இஞ்சி, கரு மிளகு, வாசனை மற்றும் சுவை பொருட்கள், வாழைப்பழம், கரும்பு, முட்டை மற்றும் சப்போட்டா பழம் உற்பத்தியில் உலகிலேயே முதன்மை நாடாகவும். கோதுமை, அரிசி, சர்க்கரை, நிலக்கடலை, மீன் உற்பத்தியில் இரண்டாவது இடத்திலும்.... கடந்தாண்டு 1.501.84 லட்சம் டன் அரிசியை உற்பத்தி செய்து வரலாற்று சாதனையை படைத்துள்ளது இந்தியா,
ஆண்டுக்கு 49.9 பில்லியன் மதிப்புள்ள வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களை ஏற்றுமதி செய்யும் ஒரு நாட்டில்... 190 மில்லியனுக்கும் அதிகமாக மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டாலும் பசியாலும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இது உலகில் பசியால் வாடும் மக்கள் தொகையில் மூன்றில் கால் பகுதி இந்தியர்கள், என்பது எவ்வளவு பெரிய முரண்.
சமீபத்தில் வெளியான உலகளாவிய பசி குறியீட்டில் 123 நாடுகளில் 102 ஆவது இடத்தில் உள்ளது இந்தியா.. இது இந்தியாவின் பசி யின் தீவிரத்தை காட்டுகிறது. பசியின் கொடுமையாலும் சத்தான உணவு இல்லாமையாலும் இந்தியா ஊட்டச்சத்து குறைபாடு உடைய நாடாக உள்ளது. இதனால் உலகளவில் ரத்த சோகை பிரச்சனையால் 1.92 பில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் ரத்த சோகையால் 6 முதல் 59 மாத குழந்தைகள் 67சதவீதத்தினரும் ,வளர்இளம் பெண்கள் 59 சதவீதத்தினரும் , பெண்கள் 57 சதவீதத்தினரும், கருவற்ற பெண்கள் 52 சதவீதத்தினரும், ஆண்கள் 25 சதவீதத்தினரும், 18.7 சதவீத குழந்தைகள் கடுமையான உடல் எடை குறைவினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது உலகிலேயே மிக அதிகமான விகிதமாகும்.
இந்தியாவில் இரும்புச்சத்து குறைபாடு என்பது பொது சுகாதார பிரச்சினையாக உள்ளது. இந்திய அரசு ரத்த சோகைக்கு எதிராக அனிமியா முக்த் பாரத், போஷன் அபியான் போன்ற திட்டங்களை கொண்டுவந்துள்ளது. இதன் நோக்கம் ரத்த சோகையின் தீவிரத்தை உணர்ந்து இந்தியா அதை 2030 க்குள் பெருமளவு குறைக்க உறுதி பூண்டுள்ளது.
ரத்தசோகை என்பது அமைதியான அதேசமயத்தில் ஒரு தீவிரமான நோய். நாம் உண்ணும் உணவில் இரும்பு சத்து போலிக் அமிலம், வைட்டமின் பி 12,வைட்டமின் ஏ இவைகள் போதியளவு உணவில் இல்லாததே ரத்த சோகை ஏற்பட காரணம்.
இதன் காரணமாக இந்திய அரசு 6x6x6 என்ற உத்தியைச் செயல்படுத்தி வருகிறது. இதன் நோக்கம் குழந்தைகள், பெண்கள் மற்றும் இளம் பருவத்தினரிடையே இரத்த சோகையை ஆண்டுக்கு 3 சதவீதமாக குறைப்பதை நோக்கமாக கொண்டு செயல்பட்டுவருகிறது.
இதன் மூலம் பயனாளிகளுக்கு இரும்புச்சத்து ஃபோலிக் அமிலம் மாத்திரைகள் வழங்குதல், குடற்புழு நீக்கம், ரத்த சோகை பரிசோதனை, ரத்த சோகை சிகிச்சை, மேலும் இதன் ஒரு பகுதியாக அரிசியை செறிவூட்டல் மூலம் இரும்பு சத்து ,ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி 12 கலந்த செறிவூட்டப்பட்ட அரிசியை மக்களுக்கு பொதுவிநியோகத் திட்டம் மூலம் வழங்கி வருகிறது மத்திய மாநில அரசுகள்.
நாமும் உண்ணும் உணவின் மூலமாகவும் ரத்த சோகையை சரிசெய்ய முயற்சிக்க வேண்டும். அதில் கீரை வகைகள், பேரிச்சை,மாதுளை, உலர் திராட்சை, அத்திப்பழம், வேர்க்கடலை,பருப்பு வகைகள், எள்,பீட்ரூட், பூசணி விதைகள், கேரட், முட்டை , இறைச்சி, மீன் இவைகளில் இரும்பு சத்து நிறைந்தது உள்ளது, எனினும் சாமானிய மக்களால் இதை அன்றாட உணவில் சேர்ப்பது என்பது சாத்தியம் இல்லை, இதனால் தான் அரசு மருந்து மாத்திரைகள் மற்றும் செறிவூட்டப்பட்ட அரிசி மூலமாகவும் ஊட்டச்சத்து குறைபாடை சரிசெய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.
கிராமங்களில் வீட்டுக்கொரு முருங்கை மரம் வைத்திருப்பார்கள். ஏனோ அதனை பயன்படுத்துவது என்பது மிகவும் குறைவுதான்.
ஆனால் இந்த முருங்கை கீரையில் சத்துக்கள் மிகுந்துள்ளது. குறிப்பாக இரும்பு சத்து , கால்சியம் , விட்டமின் A,C,E,K, B காம்ப்ளக்ஸ், பொட்டாசியம், மெக்னீசியம், துத்தநாகம், காப்பர், புரதம், நார்ச்சத்து, ஆன்டி ஆக்ஸிடென்ட், பினால்கள் மற்றும் உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள் என ஏன்னெற்ற சத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ள முருங்கைக்கீரையை கண்டுகொள்ளாமல், அதிக விலை கொடுத்து வாங்கும் கேரட் பீட்ரூட் பேரிச்சை அத்தி மாதுளை மற்றும் அசைவ உணவுகள் போன்றவற்றில் தான் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளதாக என்னுகிறார்கள்..
ஆனால் முருங்கைக்கீரையில் கேரட்டை விட 4மடங்கு விட்டமின் ஏ,
ஆரஞ்சை விட 7 மடங்கு விட்டமின் சி,
பாலை விட 17 மடங்கு கால்சியம்
வாழைப்பழத்தை விட 3 மடங்கு பொட்டாசியம்,
பாலாடையை விட 2 மடங்கு புரோட்டீன்,
பால் முட்டைக்கு இணையான புரோட்டீன், கண்ணுக்கு தேவையான அதிகப்படியான பீட்டா கரோட்டின் 80.000 முதல் 90.000 உள்ளது.
சுருக்கமாக சொன்னால் முருங்கைக்கீரையை மரத்திலேயே விளையக்கூடிய ஒரு விட்டமின் மாத்திரை என்றால் மிகையாகாது.
இதன் மகத்துவத்தை அறிந்து தான் முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் என்ற பழமொழியை சொல்வார்கள். அதாவது இளமை காலத்தில் முருங்கைகீரை, காய் பூவை அன்றாட உணவில் நாம் சேர்த்து கொண்டால் முதுமையில் யார் துணையும் (ஊன்றுக் கோல்) இன்றி நடக்கலாம் என்று பொருள்.
இதனால் தான் சித்தர்கள் இதனை பிரம்ம விருட்சம் என்கிறார்கள்.
பொதுவாக கீரை வகைகளை குழந்தைகளிடம் உணவாக சேர்ப்பது என்பது சாதாரண காரியம் அல்ல.. அதனால் முருங்கை கீரை யை இட்லி பொடியாக செய்து அவர்களுக்கு அன்றாடம் கொடுத்து வரலாம்.
முருங்கைகீரை இட்லி பொடி
தேவையான பொருட்கள்:
முருங்கை கீரை- 3கை
கடலைப்பருப்பு-1கப்
கருப்பு உளுந்தம்பருப்பு-அரை கப்
தனியா- கால் கப்
காய்ந்த மிளகாய்- 12
உப்பு- தேவையான அளவு
பெருங்காயம்-தேவையான அளவு
கருவேப்பிலை-1கை
செய்முறை
முருங்கைகீரை கருவேப்பிலை யை தவிர மற்ற அனைத்து பொருட்களையும் வாணலியில் தனி தனியாக எண்ணெய் விடாமல் வறுத்து கொள்ளவும்,
நான்கு ஐந்து நாட்கள் முருங்கைகீரையையும் கருவேப்பிலையையும் நிழலில் காயவைத்து (crispy யா இருக்கும்) அதை மிக்சியில் நன்கு நைசாக அரைத்து கொண்டு.. பிறகு அதில் வறுத்த மற்ற பொருட்களையும் சேர்த்து மிக்சியில் அரைத்தால் சுவையான முருங்கைகீரை இட்லி பொடி தயார்.
இரும்பு சத்து உணவுகளை நாம் உண்ணும் போது எலுமிச்சை அல்லது ஆரஞ்சை ஜூஸ்சாகவோ சாலட் டாகவே எடுத்துக் கொண்டுடாள் தான் இரும்பு சத்து முழுவதும் நமது உடலால் உறிஞ்சப்படும்.. இவைமட்டுமன்றி சிட்ரஸ் பழங்களான நெல்லிக்காய் சாத்துக்குடி நாரத்தை கொய்யா தக்காளி போன்றவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்துக்கலாம்.