Tamil Poem: நாளொரு வண்ணம் பொழுதொரு மேனி!

Su.tha Arivalagan
Jun 04, 2026,12:41 PM IST
- பன்முகக் கவிஞர் க.முருகேஸ்வரி
 
பூவுலகிற்கு நித்தம் ஒரு முத்தமே ஒரு நாள்!
இயற்கையன்னை தன் இதழ் பதிக்கும் திருநாள்!

இத்திருநாளை...

அறுசிறு பொழுதாக 
அவிழ்த்து  அலகிட்டு...

அவ்வலகினைப்
பக்குவமாய் பருவம் எனப் பெயரிட்டு...

ஆகா! ஆகா!என்ன விந்தை...

அதைச் சுவைத்தே..
கவி படைக்கும் என் சிந்தை!

அதை சுவைத்தே..
கவி படைக்கும் என் சிந்தை!


வைகறை


முதல் சிறு பொழுதாம் வைகறைப்பொழுது...

மருத நிலத்திற்கு உரியது எனில்...

சொல்லாமல் தெரியுமே...

அது வயலோடு உறவாடும்
உழவனின் கடும் பொழுது!

இளங் கதிரவன் பையப் பைய 
பால் முகம் காட்டும் 

பசுங்காலைப் பொழுது!

புள்ளினங்கள் புது ராகம் பாட...

புதுப்பொழுது புலர்ந்தாட..

புவிமங்கை மலர்ந்தாட

புளகாங்கிதத்துடன் இளந்தென்றலும் தவழ்ந்தோட.....

இயற்கை அன்னையின் இனிய கவிதையே...
 இவ்வைகறைப்பொழுது!


காலை 




வணக்கம் சொல்லி
வரவேற்கும் நற்காலை!

பூக்கள் மொட்டவிழ்த்து பூவிதழ் சிரிக்கும் பொற்காலை!

மங்கையர் மாக்கோலம் போட...

அன்றாட வேலைகள்
கங்கை போல் ஓட...

சோம்பல் முறித்து சுறுசுறுப்பைக் கூட்டும்
சுகமான காலை!

பரபரப்பின் உச்சமே
இந்த பகல் காலை!

இது பன்முகப் பகலவனின் பளிங்குக் காலை!


நண்பகல் 


காலை அடுத்த பொழுதே நண்பகல்!
 
இதுவே பாலை நிலத்து வன்பகல்!

முழுச் சூரியன் முகம் காட்டி வெக்கை கூட்டும் வெண்பகல்!

பகலவன் தன் தனலால் வாட்டும் பட்டப்பகல்!

வெம்மை கதிர்களால்
வேனாவெயில் கொளுத்தும் வெம்பகல்!

உச்சந்தலையில் உச்சி வெயில் இறக்கும்
உஷ்ணப்பகல்!


எற்பாடு 


நண்பகல் பிற்பாடு வருவதே எற்பாடு!

சூடான பூமிப்பந்தைக்
குளிர்விக்க ...

அனல் குறைத்து
ஞாயிறு 

தன் அழகு முகம் மறைக்கும்...

நாணப்பொழுது!

நெய்தல் நிலத்து மக்களின்
நீண்ட பொழுது எற்பாடு!

உழைத்த மக்கள் களைத்துத் திரும்பும்
உன்னதப் பொழுது எற்பாடு!

பாடும் பறவை 
மேயும்‌ ஆநிரை

ஆரவாரம் இல்லாமல் அடையும் பொழுது எற்பாடு!
 

மாலை 


இரவும் பகலும் இணைந்து சங்கமிக்கும்
சத்தமில்லா சல்லாபப் பொழுது !

அமைதியான அழகான அற்புதமான அந்தி மாலைப்பொழுது!

அந்திச் சூரியன்
அழகாய் வரைந்த

பொன்மாலைப் பொழுது!

மனதை மயக்கும் மஞ்சள்வண்ண மாலைப்பொழுது!

நிலவோடு உறவாடும் 
நினைவாலே கவிபாடும்  நீலவானப்பொழுது!


யாமம்


யாமம் என்பதே  நாளின் கடைசிப் பொழுது!

மலைக்குறிஞ்சி நிலத்து  மண்குளிர்ந்த பொழுது!

ஆகா!இந்த உலகம் இத்தனை அமைதியா என,

அலுப்பு தீர அண்டமே அயர்ந்துறங்கும்  
அற்புதப் பொழுது!

காணும் இடமெல்லாம் காரிருள் சூழ்ந்த கடுநிசிப் பொழுது !

நடந்ததை மறந்து நல்நித்திரை கொள்ளும் நடுச்சாமப்பொழுது!

இது யாமப்‌ பொழுது!

(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார். சிங்கப்பூர் பொழில் பண்பலையில் கவிதைகள் எழுதுகிறார்.. சிங்கப்பெண், அருந்தமிழ் தாரகை விருதுகள் பெற்றுள்ளார்).