கதை கேளு... கதை கேளு!
Oct 04, 2026,02:20 PM IST
- பன்முகக் கவிஞர் க.முருகேஸ்வரி
நான் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம். ஒரு நாள் எங்கள் வகுப்பிற்குள் எங்களின் உடற்கல்வி ஆசிரியர் நுழைந்தார். சிறிது நேரம் சில விஷயங்கள் பற்றிக் கூறி விட்டு உங்களுக்குக் ஒரு கதை சொல்லட்டுமா என்றார்.
இதை நாங்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை..
அப்படி அவர் அன்று கூறிய கதையைத் தான் இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன் ...
ஒரு ஊர்ல ஒரு விறகுவெட்டி இருந்தாராம் என்று ஆரம்பித்தார். நாங்கள் அனைவரும் அடடா சிறு வயதில் கேட்ட அதே விறகுவெட்டி கதையைத் தான் சொல்லப் போகிறாரோ என்று ஏமாற்றத்துடன் வேறு வழியில்லாமல் கேட்க ஆரம்பித்தோம் ...
ஆசிரியரும் சொல்ல ஆரம்பித்தார் ஒரு ஊரில் ஒரு விறகுவெட்டி இருந்தாராம்.. அவர் விறகுகளை வெட்டி அதை விற்று, அதுல வர வருமானத்தில தான் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டுமாம். அப்படி இருக்கிறப்போ.. ஒரு நாள் அவரு ஒரு ஆற்றங்கரையில் இருக்கிற மரத்தை வெட்டிட்டு இருந்தாராம்... அப்போ அவரோட கோடரி தவறி ஆத்துக்குள்ள விழுந்துடுச்சாம். அதுக்குள்ள விழுந்தவுடனே என்று ஆசிரியர் கூறியதும்...
நாங்க எல்லாரும் கோரசாக ... வர் ஆற்றங்கரையில உட்கார்ந்து அழுதுட்டு இருந்தாராம்... ஆத்துக்குள்ள இருந்து ஒரு தேவதை வந்தாங்களாம் என்று சிரித்துக் கொண்டே சொன்னோம்...
அவரும் சிரித்துக் கொண்டே ஆமாம்...ஆற்றுக்குள் இருந்து தேவதை எழுந்து வந்து விறகு வெட்டியே, விறகு வெட்டியே ஏன் அழுகிறாய் ? என்று கேட்டதாம் .அதற்கு விறகு வெட்டி நடந்ததை எல்லாம் கூறினாராம்.
உடனே தேவதை ஆற்றுக்குள் மூழ்கி ஒரு தங்கக் கோடரியை எடுத்து வந்து விறகு வெட்டியின் கையில் கொடுத்ததாம்... விறகு வெட்டி,இல்லை ...இல்லை... இது என் கோடரி இல்லை என்று சொன்னாராம்.
மறுபடியும் ஆற்றுக்குள் மூழ்கிய தேவதை ஒரு வெள்ளிக் கோடரியை எடுத்துக் கொடுத்ததாம். அதற்கும் விறகு வெட்டி , இது இல்லை என் கோடரி .என் கோடரி மரத்தால் செய்யப்பட்டிருக்கும் என்று கூறினாராம்..
மீண்டும் தேவதை ஆற்றுக்குள் மூழ்கி அவருடைய கோடரியை எடுத்துக் காண்பித்து "விறகு வெட்டியே இதுவா உன் கோடரி" என்று கேட்டதாம். அவர் ஆமாம்,இதுதான் என் கோடரி என்று கூறினாராம்.
உடனே தேவதை அவருடைய நேர்மையைப் பாராட்டி மூன்று கோடரிகளையும் அவருக்கு பரிசளித்ததாம்.
அந்தக் கோடரிகளை எடுத்துக் கொண்டு சந்தோஷமாக வீட்டிற்கு சென்றாராம் ... கதை முடியவில்லை... இனிமேல் தான் கதைக்கு ட்விஸ்ட் இருக்கிறது நண்பர்களே...
அவரின் மனைவி உங்களுக்கு இந்தத் தங்கக் கோடரியும் வெள்ளிக் கோடரியும் எங்கிருந்து வந்தது என்று கேட்டாராம். அதற்கு விறகு வெட்டி நடந்ததை எல்லாம் கூறினாராம்.
விறகு வெட்டியின் மனைவி,"யாரை ஏமாற்றப் பார்க்கிறீர்கள்... தேவதை வந்தார்களாம் தங்கக் கோடரியையும் வெள்ளி கோடரியையும் கொடுத்தார்களாம்... என் காதில் பூ சுத்துகிறீரா" என்று கூறினாராம்.
இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதாம். உடனே விறகு வெட்டி சரி நீ என்னுடன் ஆற்றங்கரைக்கு வா ...உனக்கு நான் தேவதையைக் காட்டுகிறேன் என்று அழைத்துக் கொண்டு போனாராம். இருவரும் வெகு நேரமாக ஆற்றங்கரையில் அமர்ந்திருந்தனராம். ஆனால் தேவதை வரவே இல்லையாம்.
உடனே மனைவி என்னிடம் பொய் தானே சொன்னீர்கள் என்று மீண்டும் சண்டையை ஆரம்பித்தாளாம். விறகு வெட்டிக்குத் தாங்க முடியாத கோபம். மனைவியை ஆற்றுக்குள் பிடித்து தள்ளி விட்டு விட்டாராம். தள்ளி விட்டு விட்டு ஐயையோ என் மனைவிய ஆத்திரத்துல இப்படி தள்ளி விட்டுட்டேனே என்று அழுது புலம்பினாராம்.
உடனே ஆற்றில் இருந்து தேவதை எழுந்து வந்ததாம். "விறகு வெட்டியே ஏன் அழுகிறாய்?"என்று கேட்டதாம்.
அதற்கு விறகு வெட்டி நடந்ததை எல்லாம் கூறினாராம். உடனே தேவதை ஆற்றுக்குள் மூழ்கி ஒரு அழகான பெண்ணை (இந்த இடத்தில் அவர் ஒரு சினிமா ஹீரோயின் பெயரைக் குறிப்பிட்டார். நான் அதை தவிர்த்து விட்டேன்) தூக்கிக் காண்பித்ததாம்....
இவரா உன் மனைவி என்று கேட்டதாம். ஆமாம் இவர்தான் என் மனைவி என்று விறகு வெட்டி கூறியதும் தேவதைக்கு ஒரே அதிர்ச்சி ...
அடப்பாவி தங்கம் வெள்ளி விரும்பாதவன் ஒரு அழகான பெண்ணைப் பார்த்ததும் மயங்கி விட்டானே என்ற அதிர்ச்சியில், "விறகுவெட்டி இவர் உன் மனைவி இல்லை என்று எனக்கு தெரியும். ஏன் இது போல் பொய் சொல்கிறாய்" என்று கேட்டதாம் தேவதை.
அதற்கு விறகு வெட்டி கூறினாராம் ...முதலில் நீ இந்த பெண்ணைத் தூக்கிக் காண்பிப்பாய்.... நான் இல்லை என்று சொன்னதும் வேறு ஒரு பெண்ணைத் தூக்கி காண்பிப்பாய்.... அவரும் இல்லை என்று சொன்னதும் என்னுடைய உண்மையான மனைவியைக் கூட்டி வருவாய் ...
ஆமாம் என்று நான் சொன்னதும் என் நேர்மையைப் பாராட்டி மூன்று பேரையும் என் தலையில் கட்டி விடுவாய்...
ஒன்றை வைத்துக் கொண்டே என்னால் சமாளிக்க முடியவில்லை... மூன்றை வைத்துக்கொண்டு நான் எவ்வாறு சமாளிப்பது என்று அந்த அழகிய பெண்ணின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு, ஆள விடுங்கடா சாமி என்று தலைதெறிக்க ஓடிவிட்டாராம்.... இப்படி உடற்கல்வி ஆசிரியர் சொல்லி முடிக்க வகுப்பில் ஒரே சிரிப்பலை... அந்த சிரிப்பலை அடங்குவதற்கு ஒரு சில நிமிடங்கள் ஆயிற்று. சிரித்துச் சிரித்து வயிறே வலித்து விட்டது .
இந்தக் கதையை நான் பல இடங்களில் பகிர்ந்து இருக்கிறேன் தற்போது உங்களுடன்...
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். தமிழ்நாடு அரசின் டாக்டர் எஸ் ராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருது பெற்றவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார். சிங்கப்பூர் பொழில் பண்பலையில் கவிதைகள் எழுதுகிறார்.. சிங்கப்பெண், அருந்தமிழ் தாரகை விருதுகள் பெற்றுள்ளார்).