கோயில் தொழும் தெய்வம்... நீயின்றி நான்‌‌ காண வேறில்லை....!

Su.tha Arivalagan
Apr 02, 2026,10:32 AM IST

கவிஞர் க. முருகேஸ்வரி


எனக்குப் பிடித்த பெண் ஆளுமை 

வேறு யாருமல்ல...

என்னைக் கருவில் சுமந்து உயிரைக் கொடுத்து உருவில் வடித்து உலகம் கொடுத்த என் அம்மா....என்னை ஈன்றெடுத்த என் அன்னையைப் பற்றித் தான் சொல்லப் போகிறேன்.


என்‌ அம்மா ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும் அந்த வீட்டிற்கு மட்டுமல்லாமல் அந்த ஊருக்கே என் அம்மா செல்லப்பிள்ளை


எப்படியென்று கேட்கிறீர்களா....சொல்கிறேன்....

என் அம்மாவின் இயற்பெயர் லட்சுமி என்றாலும் அவரின் செல்லப்பெயர் செல்லப்பிள்ளை...


என் அம்மாவை அனைவரும் செல்லப்பிள்ளை என்றே அன்போடு அழைப்பார்கள்.




எனது அம்மா பிறந்த ஊர் ரெட்டியபட்டி.

விருதுநகர் மாவட்டம்.எனது அம்மா படிப்பில் மிகவும் சுட்டி.எனவே அந்த காலத்தில் ஆண்களுடன்‌ சேர்ந்து ஓல்டு எஸ் எஸ் எல் சி படிப்பை ஒற்றைப் பெண்ணாக பல எதிர்ப்புகளுக்கு இடையே படித்து முடித்துள்ளார்...

படித்து முடித்தவுடன் திருமணம்...


வழக்கம்போல் அனைத்து பெண்களுக்கும் நடக்கும் அத்தனை கஷ்டங்களையும் புகுந்த‌ வீட்டில் அனுபவித்துள்ளார்.என் அம்மாவிற்கு ஐந்து பிள்ளைகள்.மூன்று ஆண் குழந்தைகள், இரண்டு பெண் குழந்தைகள்....


நான் மூன்றாவது


என் அம்மாவிற்கு மிகவும் பிடித்த குழந்தை.அனைவரையும் பிடிக்கும்.இருப்பினும் என்னை அதிகமாக பிடிக்கும்.


அதற்கான காரணம் 

என் அம்மா பள்ளியில் படிக்கும் போது ஆடுவார்.பாடுவார்.நாடகம் நடிப்பார்.பாடல் எழுதுவார். நன்றாக வரைவார்.


இந்த திறமைகள் அனைத்தும் என்‌ அம்மாவிடம் இருந்து எனக்குக் கிடைத்த பொக்கிஷங்கள்....


என்‌ அம்மா அங்கன்வாடி ஆசிரியராக இருந்தார்.

அந்தப் பிஞ்சு குழந்தைகளுக்கு என் அம்மா அர்ப்பணிப்போடு அனைத்தையும் கற்றுக் கொடுப்பார்.


அம்மாவின் பள்ளி மிகச் சிறப்பாக இருக்கும்.


பள்ளியைப் போலவே குடும்பத்தையும் நன்றாகக் கவனித்துக் கொள்வார்.


என்‌ அம்மாவிடம் எனக்கு மிகவும் பிடித்தது சுறுசுறுப்பு....


மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார்.அழகாக ஆடை  அணிவார். அவர் செய்யும் ஒவ்வொரு வேலையிலும் ஒரு நேர்த்தி இருக்கும்.


நான் படித்து முதல் ரேங்க் எடுத்தால்..என் அம்மா தான் படித்த கதையை எனக்குக் கூறுவார்..... நான் போட்டிகளில் பங்கேற்க எனக்கு பாடல் கற்றுக் கொடுப்பார்.ஒரு நாள் கூட பள்ளிக்கு விடுப்பு எடுக்காமல் நான் பள்ளிக்கு செல்வேன்...காரணம் என் அம்மா....


நாங்கள் ஒரு நாள் கூட பட்டினியாக இருந்ததில்லை.என் அம்மா எங்களை அடித்தாலும் நாங்கள் அழுதுகொண்டே சாப்பிடாமல் அடம் பிடித்தாலும் பட்டினியாக உறங்கவிட மாட்டார். குத்துப்பட்டவன் தூங்குனாலும் கொற வயித்துக்காரன் தூங்க மாட்டான் என்று கூறி சாப்பிட வைப்பார்.


என்‌ அம்மா என்னை அழகாக பள்ளிக்கு அனுப்புவார். என் அம்மா நான் பள்ளி விட்டு வரும்முன் சோறு ஆக்கி வைத்திருப்பார்.


என் அம்மா எங்களை மிகவும் பத்திரமாக பார்த்துக் கொள்வார். எங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் என் அம்மா உடனே மருத்துவரிடம் அழைத்துச் சென்று விடுவார். தூங்காமல் எங்களுக்கு உடல்நிலை சரியாகும் வரை மடியில் போட்டு தூங்க வைப்பார்.


என் அம்மா தனக்கு தெரிந்த விஷயங்களை அனைவருக்கும் கற்றுக் கொடுப்பார்.

என் அம்மா எங்களுக்காக நிறைய கஷ்டப்பட்டு இருக்கிறார்.

நிறைய வலிகளையும் வேதனைகளையும் தாண்டி எங்களை வளர்த்து ஆளாக்கி யுள்ளார்.


என்‌ அம்மா அடியும் கொடுப்பார். அன்பும் கொடுப்பார்.

பொய் சொல்லக்கூடாது 

உண்மையே பேச வேண்டும் 

அனைவருக்கும் மரியாதை தர வேண்டும் 

இதில் என் அம்மா கவனமாக இருப்பார்.


அனைத்து வீட்டு வேலைகளையும் அவரே செய்வார்.

எங்காவது வெளியே சென்று விட்டு வந்தால் எல்லோரும் களைப்பாக இருக்கு என்று படுத்து விடுவோம்.


என் அம்மா நேரே அடுப்படிக்குச் சென்று சமைத்து விட்டு நாங்கள் சாப்பிட்ட பிறகு படுத்து உறங்குவார்


அப்போது புரியவில்லை.

அனுபவிக்கும் போது தான் தெரிகிறது... என் அம்மாவுக்கும் வலித்திருக்கும் என்று....

அம்மா சாதாரணம் அல்ல என்று...

அம்மா ஒரு சரித்திரம்


அம்மா உன்னால் மட்டுமே இது சாத்தியம் அம்மா


என்‌ அம்மா மடி மட்டுமே போதும் உலகை வெல்லலாம். ஆனால் என் அம்மா கோயம்புத்தூரில் தம்பியிடம் உள்ளார். யார்‌ என்னைக் காயப்படுத்தினாலும் என் மனம் என்‌ அம்மாவைத் தேடும்.

எனக்கு ஏதேனும் இடையூறு என்றால் 

அம்மாவின் மன உறுதியை மனதில் நினைத்துக் கொண்டு அதைக் கடந்து அல்லது போராடி வென்று செல்வேன்.

அம்மா மட்டுமே ஆறுதல் தர முடியும் என்பதால்


அம்மா இது வார்த்தை அல்ல வாழ்க்கை....


மணிமாளிகை மாடங்களும் மலர் தூவிய மஞ்சங்களும்

தாய்வீடு போலில்லை...

இங்கு தாலாட்ட ஆள் இல்லை....


கோயில் தொழும் தெய்வம்... நீயின்றி நான்‌‌ காண வேறில்லை....!


(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).